அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் அu்ச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் மன்று அனுமதித்துள்ளது.
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அவ்வாறான நிலையில் , தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து , தன்னை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் .
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் நாடாளுமன்ற உறுப்பினருடன் முரண்பட்டவர்களில் பெண்ணொருவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதனை அடுத்து குறித்த பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது .
அதன்போது குறித்த பெண் ஒரு வயது குழந்தைக்கு தாய் எனவும் , குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய தேவை உள்ளதாகவும் மன்றுக்கு சுட்டிக்காட்டிய போது , குழந்தையை தாயுடன் இருக்க மன்று அனுமதித்தது.
முதலாம் இணைப்பு
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி!
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் நேற்றையதினம் (25) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
பெண்களை மிரட்டிய சம்பவம்
அந்த காணியானது தனது காணி என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறி வருகின்ற நிலையில், வேறொரு தரப்பினரும் அதில் தங்களது காணி இருப்பதாக உரிமை கோரி வருகின்றனர்.

அந்தவகையில் நேற்றையதினம் குறித்த காணியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈடுபடும்போது, அங்கு வந்த இரண்டு பெண்கள் அதில் ஒருபகுதி தமது காணி என்று கூறி முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
எதிரே நின்ற பெண்கள் கையில் எந்தவிதமான ஆயுதங்களோ, பொருட்களோ இல்லாமல் நின்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திடீரென தனது கை துப்பாக்கியை எடுத்து அந்த பெண்களை மிரட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
துப்பாக்கியை வைத்து பெண்களை மிரட்டியுள்ள இந்த சம்பவமானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு துப்பாக்கி வழங்கியுள்ளமை மக்களுக்கு ஆபத்தானது என ஏற்கனவே பலதடவைகள் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியிருந்தனர்.
இந்த நிலையில் இதுவரை அந்த துப்பாக்கியானது மீளப் பெறப்படவில்லை எனவும் இது இவ்வாறு தொடருமானால் பல அசம்பாவிதங்கள் ஏற்படும் எனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்