மாதகல் விகாரைக்கு அருகில் கடற்றொழிலுக்கு கடற்படையினர் தடை
யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என சிறிலங்கா கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்றொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்திருந்தனர்.
மகிந்தவின் அனுமதி
இந்த நிலையில், அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , அப்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட கடற்படையினர் அனுமதித்தனர்.
தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி, விகாரையின் பின் பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவித்துள்ளார்.
அத்துடன் அப்பகுதிக்கு அருகில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடற்படையினர் அவர்களை அவ்விடத்தில் இருந்து துரத்தி விடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |