கொழும்பு துறைமுக நகரத்தில் தனியார் வைத்தியசாலை: கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டம்
கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவொன்றினை ஆசிரி மருத்துவமனை முன்மொழிந்துள்ளது.
அதன்படி, ஆசிரி போர்ட் சிட்டி ஹொஸ்பிட்டல் (தனியார்) நிறுவனத்தினால் கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்காக சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசாங்க ஆதரவை பெற்றுள்ளது
இத்திட்டமானது, 2023 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்காக விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குதல் தொடர்பான வழிகாட்டலின் கீழ் உருவாக்கப்படவுள்ளது.
மேலும், உரிய மூலோபாய முன்னுரிமைகளுடன் இத்திட்டமானது அரசாங்க ஆதரவையும் பெற்றுள்ளது.
ஒப்புதல் பெறப்பட்டுள்ளமை
இது தொடர்பாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், மேற்குறிப்பிட்ட ஏற்பாடுகளின் கீழ் ஆசிரி வைத்தியசாலைத் திட்டத்திற்கு உரிய விலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
தவிரவும், இது குறித்த வர்த்தமானி உத்தரவின் ஊடாக திட்டத்தை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாக அறிவிப்பதற்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவை அதிபரின் உத்தரவுடன் நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |