ஜெனிவாவிலாவது நீதி கிடைக்குமா - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை..!
ஜெனீவாவில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடரிலாவது தமக்கான நீதி பெற்றுத்தரப்படும் என நம்புவதாக யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவி சிவபாதம் இளங்கோதை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமக்கான தீர்வு கிடைக்காத நிலையிலே தாம் ஐக்கிய நாடுகள் சபையை நாடியுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்துள்ளார்.
உரிய தீர்வு
இதேவேளை, மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தினால், இன்று முற்பகல் மன்னாரில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.
ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் இருப்பதாகவும், ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போவதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
