மட்டக்களப்பில் சி.ஐ.டி அதிகாரிகளால் தாக்குதலுக்குள்ளான புகைப்படக் கலைஞர்கள்
மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் தவறவிட்ட கமரா அடங்கிய பையைத் தேடிச் சென்ற புகைப்படக் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி) அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை நாவலடி கடற்கரைப் பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த கல்லடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் குழுவினர், தவறுதலாகத் தமது கமரா மற்றும் உபகரணங்கள் அடங்கிய தோல்பையை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் இரவு 8 மணியளவில் பையைத் தேடிச் சென்றபோது, அங்கிருந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் மீது Torch Light வெளிச்சம் பட்டுள்ளது.
சி.ஐ.டி அதிகாரிகள்
இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர், "நாங்கள் சி.ஐ.டி அதிகாரிகள், ஏன் எங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சினாய்?" எனக் கேட்டுத் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த ஏனைய புகைப்படக் கலைஞர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர் மீதும் குறித்த குழுவினர் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு அஞ்சி புகைப்படக் கலைஞர்கள் தமது கைத்தொலைபேசிகள் மற்றும் கமராக்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை புகைப்பட நிறுவன உரிமையாளர் காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
விசாரணைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், தாக்குதல் நடத்திய அதே சி.ஐ.டி அதிகாரிகள் இருவர், "கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் கமரா பையை மீட்டோம்" எனக் கூறி அதனை ஒப்படைக்க காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதன்போது, முறைப்பாட்டாளரால் அவர்கள் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து, சி.ஐ.டி அதிகாரிகள் இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஏனைய இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கம்பளை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்த சி.ஐ.டி அதிகாரிகள் எனவும், ஏனைய இருவரும் அவர்களது நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |