வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதிக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை
வவுனியாவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் கைதானவருக்கு எதிரான விசாரணைகளில் அவர் கொலையை செய்தமை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மற்றொரு முச்சக்கர வண்டி சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுமனை புகுவிழா நிகழ்வில் கைகலப்பு
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்வு முடிந்ததும் இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது அங்கு கலந்து கொண்டவர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்பு அவரவர் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
மறுநாள் 29 ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா இலங்கை வங்கியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் புகையிரத கடவையில் சடலம் ஒன்று காணப்படுவதாக காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சடலம் தடயவியல் காவல்துறையின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து முதலாம் சந்தேக நபரான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரண்டி சாரதி கைது செய்யப்பட்டதுடன், இரண்டாம் சந்தேக நபரான பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணைகள் நடைபெற்று தடுப்பு காவலில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் அரச சட்ட வாதியான தர்சிகா திருக்குமரநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
முச்சக்கர வண்டியில் பெறப்பட்ட இரத்த மாதிரி
வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது முச்சக்கர வண்டியில் பெறப்பட்ட இரத்த மாதிரியும், கொலை செய்யப்பட்ட நபரின் இரத்த மாதிரியும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போவதை தடயவியல் காவல்துறையினர் சாட்சியத்தின் மூலம் வெளிப்படுத்தினர். அத்துடன், மொட்டை விசை பாவித்ததன் மூலம் வெளிக்காயம் மற்றும் உட்காயம் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் சாட்சியமளித்தார்.
விதிக்கப்பட்ட மரண தண்டனை
சந்தர்ப்பம், சூழ்நிலை, சாட்சியம் மூலம் முதலாம் எதிரியான பொதுக்கிணறு வீதி தோணிக்கல்லைச் சேர்ந்த ஜேசுதாசன் இலங்கேஸ்வரன் தான் குறித்த கொலையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அரச சட்டவாதியால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால், முதலாம் சந்தேகநபருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்ததுடன், இரண்டாம் எதிரியான சந்தேக நபரை விடுவித்து மேல் நீதிமன்று தீர்ப்பளித்தது.
இதேவேளை வவுனியா சமளங்குளம் பகுதியில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீடொன்றினுள் புகுந்து இருவரை கொலை செய்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று முன்தினம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 12 மணி நேரம் முன்
