ஈழத்தமிழர்களுக்கான முதல் தீர்வு முயற்சியாக பண்டா- செல்வா ஒப்பந்தம் இடம்பெற்று இன்று 66 ஆண்டுகள்
வரலாறு என்பது வலிதான கடந்தகாலங்களை நிகழ்கால வாழ்க்கைத்தத்துவங்களுக்கான பாடங்களாக கொண்டு நகரவேண்டிய தேவையினை ஏற்படுத்துகின்ற ஒரு பதிவாகும் . அந்த பதிவுகளின் படி ஈழத்தமிழினம் கடந்த ஏழு தசாப்தங்களுக்கு அதிகமாக தனக்கான சுயாட்சி உரித்தினைக்கோரி சிறிலங்காவின் சிங்களவர்களுடன் தொடர்ச்சியாக போராடிவருகிறது
அந்த போராட்டப்பதையில் மிகப்பாரிய அளவிலான இழப்புகளை தன் வரலாற்றுப்பக்கங்களில் கொண்டிருக்கின்ற ஒரு இனமாக அந்த இழப்புகளின் பதிவுகளின் வழியே தம்மை விடுவித்துக்கொள்ளுவதற்காக சிங்களத்தரப்புகளுடன் போராட வேண்டிய கட்டாயத்தை ஈழத்தமிழர்களுக்கு காலம் நிர்ப்பந்தித்தது.
அந்த அடிப்படையில் ஈழத்தமிழர்களின் போராட்ட வடிவம் என்பது ஆரம்பகாலங்களில் அஹிம்சை வடிவில் ஜனநாயக தோர்தலின் மூலமும் சத்தியாக்கிரகங்களின் மூலமுமாக இருந்தது வந்தது. எனினும் இந்த போராட்டங்களின் மூலமாக சிறிலங்காவின் சிங்கள களத்தரப்பிடமிருந்து எதனையுமே பெற்றுவிடமுடியாது என்ற அன்றைய கள ஜதார்தத்த்தை உணர்ந்துகொண்ட தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி தமக்கான விடுதலையை கோரி போராடவேண்டிய கட்டாயத்தினுள் தள்ளப்பட்டார்கள்.
இப்படியாக தமது உரிமைகளைக்கோரி தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமாக தமது இலக்குகளை அடைய போராட ஆரம்பித்த காலமது.
இலங்கைத்தமிழசுக்கட்சியினர் திருகோணமலையில் இடம்பெற்ற தமது மாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையிலான சமஸ்டியின் மீதான கோரிக்கையோடு சத்தியாக்கிரப்போராட்டத்தில் ஈடுபடத்தயாரானார்கள் .
அதன்படியாக 1957 ம் ஆண்டு சிறிலங்காவின் சுதந்திரதினத்தை ஹர்த்தால் தினமாக அறிவித்த தமிழரசுக்கட்சி தனிச்சிங்கள சட்டத்திற்கு எதிரான தமது நகர்வுகளை மேற்கொள்ளத்தொடங்கியிருந்தது அதன்படியாக வடக்கு கிழக்கு தாயக நிலப்பரப்பெங்கிலும் வெற்றிகரமான முறையில் அன்றைய கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது
இதன் விளைவு தென்னிலங்கையின் சிங்களவர்களிடையே பாரிய அதிர்ப்தியினை உண்டுபண்ணியது , வாகனங்களின் மீதிருந்த தமிழ் எழுத்துகள் தாரூற்றி அழிக்கப்படும் அளவுக்கு அன்றைய எதிர்ப்புகள் பேரளவில் உருப்பெற்றது.
இப்படியாக தமிழ் சிங்களத்தரப்புகளிடையே ஏற்பட்ட முறுகல்நிலையும் தமிழரசுக்கட்சியின் சத்தியாக்கிரக முனைப்புகளும் அன்றைய சிறிலங்க ஆட்சியாளர்களை ஈழத் தமிழர்களுடன் ஒரு ஒப்பந்ததை ஏற்படுத்தவேண்டிய நிலையை உருவாக்கியது .

இதன் பிண்ணணியில் அன்றைய சிறிலங்காவின் பிரதமர் பண்டாரநாயக்கா தாம் தமிழர்களுடன்்பேச்சுவார்த்தை நடாத்த தயாராக இருப்பதாக அறிவித்தார் . அதனை ஏற்றுக்கொண்ட தந்தை செல்வநாயகம் அவர்கள் “….தகராறுகளைத் தீர்க்கும் விடயத்தில் பேச்சுவர்த்தைக்கும், சமரசத்தீர்வுக்கும் முதலிடம் அளிக்க வேண்டும் என்பதில் நான் நம்பிக்கையுள்ளவன்; இக் கருத்தை ஏற்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.” என தமது சார்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் 1957 ம் வருடம் யூலை மாதம் 26 ம் திகதி இலங்கைத்தமிழசுக்கட்சியின் தலைவர் செல்வநாயகம் அவர்களுக்கும் அன்றைய சிறிலங்காவின் பிரதமர் பண்டாரநாயக்கா அவர்களுக்குமிடையில் புரிந்துணர்வுகளின் அடிப்படையிலான ஒரு ஒப்பந்தமாக கைச்சாத்தானது.