இயல்பு நிலைக்கு திரும்பாத பங்களாதேஷ்: உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
பங்களாதேஷில்(Bangladesh) மாணவர்கள் போராட்டம் ஆங்காங்கே நீடித்து வரும் நிலையில்,தலைமை நீதிபதி ஒரு மணி நேரத்தில் தனது பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(10) முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பங்களாதேஷ் உயர் நீதிமன்றத்தை மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால், பங்களாதேஷில் மீண்டும் இன்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சி
பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், வன்முறையாக மாறியது. இதனை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர் நாட்டை வெளியேறியுள்ளார்.
மேலும், அவரின் பதவி விலகலை தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தை அந்த நாட்டு இராணுவம் கையில் எடுத்துள்ளது. தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சி அமையும் வரை, நாட்டில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என இராணுவ தளபதி வேக்கர் உஸ் ஜமான் அறிவித்துள்ளார்.
அந்த நாட்டு சட்டப்படி ,பங்களாதேஷில் அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் பதற்றம்
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் தலைமையில்தான் இடைக்கால அரசு அமைய வேண்டும் என்பதில் மாணவ பிரதிநிதிகள் உறுதியாக இருந்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இடைக்கால அரசுக்கு தலைமை தாங்க முகமது யூனுசும் சம்மதம் தெரிவித்தார்.
இராணுவமும் அதை ஏற்றுக் கொண்டது. அதனை தொடர்ந்து, 84 வயது முகமது யூனுஸ், இடைக்கால அரசின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் பங்களாதேஷில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.இன்று உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டதன் மூலம், மீண்டும் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |