மட்டக்களப்பில் வங்கி கொள்ளை முறியடிப்பு..!
மட்டக்களப்பு - காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியிலுள்ள இலங்கை வங்கி கிளையில் அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் களவாட முயற்சித்துள்ளனர்.
வங்கியின் முன் கதவினை உடைத்து உள்ளே சென்று களவாட முயற்சித்த நிலையில், எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் வங்கி கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்ற நிலையில் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்காணிப்பு கருவி
இதனையடுத்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வங்கிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் தடயவியல் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வங்கியின் கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ள காட்சிகளின் உதவியுடனும் களவாட முயன்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
