பீரிஸை தொடர்ந்து இந்தியா பறக்கிறார் பஸில் ராஜபக்ச
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அண்மையில் இந்தியா சென்று திரும்பிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸை அடுத்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksha) இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்து வரும் சில தினங்களில் அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடெல்லிக்கு செல்லவுள்ளதாக தெரியவருகிறது.
இவரது இந்த விஜயம் தொடர்பில் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புது டெல்லியில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் வழங்கப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் கடன் சலுகை தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானமிக்க நாட்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தனிப்பட்ட ரீதியிலும் ஆர்வம் கொண்டிருப்பது தொடர்பில் இந்திய நிதி அமைச்சருக்கு உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை கூட நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
