யார் எப்பதவியில் இருந்தாலும் நாட்டை ஆள்வது பசிலே- உள்வீட்டு இரகசியம் அம்பலம்
நாமல் ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற கனவு தமக்கு இல்லை என தூய ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச மன்னராக இருந்தாலும், கோட்டாபயய ராஜபக்ச மன்னராக இருந்தாலும், நாமல் ராஜபக்ச அரசராக இருந்தாலும், நாமலின் மகன் கேசர அரசராக இருந்தாலும், பசில் ராஜபக்சவே நாட்டை ஆள்கிறார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியானது கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடியல்ல என்றும் நீண்டகால கடன் சுமையால் ஏற்பட்ட நெருக்கடி என்றும் தாம் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவதாகவும், அந்த உண்மையை கூறியதற்காக தாம் அரசாங்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதாகவும் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தூய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர், இந்த நெருக்கடி குறித்து எச்சரிக்கும் பதினொரு அமைச்சரவைப் பத்திரங்களை தாம் சமர்ப்பித்ததாகவும் ஆனால் நிதியமைச்சர் வேண்டுமென்றே நெருக்கடியை அதிகரிக்க அனுமதித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
