மின்சார சபை அலுவலகத்திற்கு முன்னால் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு ஆரையம்பதி ஒல்லிக்குளம் குடியேற்ற கிராம மக்கள் மின்சார வசதியின்றி வசித்து வருகின்ற நிலையில், தமக்கான மின்சாரத்தை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
காத்தான்குடி இலங்கை மின்சாரசபை அலுவலகத்திற்கு முன்பாக குறித்த குடியேற்ற கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் குடியேற்ற கிராம மக்கள் மின்சாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக மின்சாரத்தை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை காத்தான்குடி இலங்கை மின்சாரசபை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டம்
வெளி இடங்களிலிருந்து குடியேறிய மக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள ஒல்லிக்குளம் குடியேற்ற கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தில் மின்சாரமின்மையால் மாணவர்கள் கல்வி கற்கமுடியாமலும் பொதுமக்கள் பாம்புத் தொல்லைகளினால் பெரும் அவலங்களை எதிர் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனினம் குறித்த கிராமத்திற்கு மின்னிணைப்பை ஏற்படுத்த சுமார் 20 இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுகின்ற போதிலும், இதற்கான நிதி இலங்கை மின்சார சபையிடம் இல்லை என காத்தான்குடி பிரதேச மின் அத்தியட்சகர் கனகசபை சிவேந்திரன் தெரிவித்துள்ளார்.
நிதி கிடைத்தவுடன் குறித்த பணியினை நிறைவு செய்யலாம் என அவர் குறிப்பட்டுள்ளார்.





