தமிழரசுக்கட்சி சார்பில் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மட்டக்களப்பு (Batticaloa) புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் குடிநீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் பாரிய போராட்டம் வெடிக்கும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “குடிநீர் என்பது ஒரு விற்பனை பொருள் அல்ல.
அது இறைவனால் மனிதர்களின், உயிரினங்களின் தாகத்தை போக்குவதற்காக படைக்கப்பட்ட இயற்கை வளம்.
அதனை உறிஞ்சி விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்குவதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசு ஒருபோதும் அனுமதி வழங்க கூடாது.
மீறி வழங்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் அவ்வாறான போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சி முன்னின்று ஆதரவு வழங்கும்” என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
