சீனா செல்ல மறுக்கும் அமெரிக்கா!! பிரித்தானியா, அவுஸ்திரேலியாவின் முடிவு?
இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறலைக் கண்டித்து சீனாவில் 2022இல் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனை வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜென் சகி உறுதிசெய்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
''ஷின்ஜியாங்கில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் 2022ம் ஆண்டு நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன் மூலம், ஒலிம்பிக் தொடரில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்பார்கள்.
ஆனால், ஒலிம்பிக் சார்ந்த நிகழ்ச்சிகளில், எந்த அதிகாரியையும் அமெரிக்கா அனுப்பி வைக்காது. இதே கொள்கை, பீஜிங்கில் நடக்க உள்ள, குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளுக்கும் பொருந்தும்.
ஒலிம்பிக் போட்டிக்காக ஆண்டுக்கணக்கில் அமெரிக்க வீரர்கள் பயிற்சி எடுத்துள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகளை மொத்தமாக புறக்கணிப்பது என்பது சரியான நடவடிக்கையாக இருக்காது'' எனக் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணித்தது, இதற்குப் பதிலடியாக சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் நட்பு நாடுகள் இணைந்து, 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்திருந்தனர்.
தற்போது சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இதே முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.