இலங்கை - இந்திய உறவில் முக்கிய மைல் கல்! ஒரே குறிக்கோளுடன் பயணம்
2047ஆம் ஆண்டில் இந்தியா தனது 100ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. அதனை நோக்கிய பயணத்தை இந்தியா ஆரம்பித்துள்ளது. இலங்கையும் அதே குறிக்கோளுடன் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
எனவே இந்த அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் இலங்கை இந்தியாவை அரவணைத்துச் செல்லும் என தான் நம்புவதாக இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி. எல் முருகன் தெரிவித்தார்.
இந்திய அரசின், 1350 கோடி ரூபாய் நன்கொடையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘கலாசார மத்திய நிலையம்’ இன்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எல் முருகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எங்கள் உறவில் முக்கிய மைல் கல்
மேலும் உரையாற்றிய அவர், இன்றைய நாள் எமது இரு நாடுகளுக்கும் மிகச் சிறப்பானதாகும். ஏனெனில் யாழ். கலாசார மையம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக எனக்கும் இதில் கலந்து கொள்ள கிடைத்தமையை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இது எங்கள் உறவில் முக்கிய மைல் கல்லாக நினைவில் கொள்ளப்படும்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த அற்புதமான வசதிகள் நிறைந்த கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டினார் என்பதை நான் இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் நினைவுகூறுகின்றேன். இத்திட்டத்தை நிறைவு செய்து பொது மக்களிடம் கையளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்நிலையம் மக்களின் கலை மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த உதவும். திரையரங்கு பாணியில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கம் , மிதக்கும் மேடை, பதினொறு மாடிகள் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்ட இம்மையம் இலங்கை மக்கள் மீது இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டின் நீடித்த அடையாளமாக இருக்கும்.
நான் இங்கே தங்கியிருந்த காலப்பகுதியில் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், விவசாயம் அதற்கும் அப்பாலென இந்தியாவின் நிலையான அர்ப்பணிப்பை அனைத்து மாகாணங்களிலும் தெட்டத் தெளிவாகக் கண்டேன். துரையப்பா மைதானத்தின் புனரமைப்பு மற்றும் புனிதமான திருக்கேதிஸ்வர ஆலயத்தின் மறுசீரமைப்பு ஆகிய இரண்டும் நான் நேரில் கண்ட உதாரணங்கள் ஆகும்.
அயலவர்களுக்கு முன்னுரிமை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘அயலவர்களுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கமையவே இந்த அர்ப்பணிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இக்கொள்கையின் கீழ் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பெறுவது இயற்கையானது. 2022ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி மற்றும் பொருளாதார உதவிகளை விட பெரிய விடயம் எதுவும் இல்லை.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துக்கு எழுத்து மூலமான நிதி உத்தரவாதத்தை வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதில் பெருமை கொள்கிறோம்.
இதுபோன்றே, இலங்கையிலுள்ள எமது நண்பர்களுக்கு இந்தியா பல தடவைகள் துணை நின்றுள்ளது. இது மக்களுக்கிடையிலான உறவுகளையும் கலாசார உறவுகளையும் மென்மேலும் வலுவூட்டுவதாக அமையும் .
இரு நாடுகளும் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டாலும் இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்து இலங்கையின் வடக்கிற்கு பயணிப்பதில் சிரமம் இருந்தது. இரு நாடுகளதும் முயற்சியால் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான நேரடி விமான சேவையை நாம் மீண்டும் தொடங்கினோம்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள், வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாசார நிகழ்வுகளை மேம்படுத்துவதற்கான உந்து சக்தியாக அமையும்.
உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது போன்றே படகு சேவையை ஆரம்பிக்கவும் நாம் பணியாற்றி வருகின்றோம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் பேரில் வட மாகாணத்திலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 பிள்ளைகளுக்கு இந்திய அரசின் சார்பில் புலமைப்பரிசில் வழங்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்படும்” - என்றார்.
