இனப்படுகொலை நடக்கவில்லையெனில் பன்னாட்டு விசாரணைக்கு ஏன் அஞ்சுகிறது ஶ்ரீலங்கா…
இலங்கையில் இனவழிப்பு என்ற சொற்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருப்பது என்பது பல்வேறு செய்திகளை சொல்லுகின்ற விடயமாகும்.
முதலில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதனை மூடி மறைக்க இப்படிச் சட்டம் பாயும் என்கிற அரசின் ஒப்புதல் வாக்குமூலமாக அமைகின்ற அதேவேளை, இலங்கையில் தமிழர்கள் தமக்கு நடக்கும் ஒடுக்குமுறைகளைக் கூட பேச முடியாத மிகப்பெரிய அடக்குமுறையில் வாழ்கிறார்கள் என்பதையும் அதாவது எப்படியான இனவழிப்புக்குள் வாழ்கிறார்கள் என்பதையும் அமைச்சர் விஜித ஹேரத்தின் இந்த நிலைப்பாடு தெளிவுபடுத்தியுள்ளது.
ராஜபக்சக்களை விஞ்சியவர்கள்
அத்துடன் ராஜபக்சக்களை விஞ்சியவர்களாக ஜேவிபியினர் செயற்படுகின்றனர் என்பதையும் இந்த நிலைப்பாடும் கருத்தும் தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.
விஜித ஹேரத் தனது கருத்தின் மூலம் கோட்டபாய ராஜபக்சவின் பாதையில் பயணிக்கின்றார் என மனித உரிமை செயற்பாட்டாளர் மரிஷா டிஎஸ், விஜித ஹேரத் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை இடம்பெறுகின்றது என்பதை கடுமையாக மறுப்பதுடன் கோட்டாபய தெரிவித்த 'எங்கள் படையினர் மனிதாபிமான யுத்தத்திலேயே ஈடுபட்டனர்சிறுவர்களையும் முதியபெண்களையும் நீரேரி ஊடாக சுமந்து சென்றனர் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை?’ என்பதை பின்பற்றுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ராஜபக்சவை தூண்டியமைக்காகவும் இறுதி யுத்தத்தில் கடும் ஆட்டிலறி தாக்குதல்களை மேற்கொண்டு முடித்துவிடுமாறு தூண்டியமைக்காகவும் தமிழர்களின் கால்களில் விழுந்து தங்களை மன்னிக்குமாறு கோருவதற்கு பதில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தேசிய மக்கள் சக்தி, பொதுமக்கள் கொல்லப்படவில்லை என கண்மூடித்தனமாக மறுக்கின்றது என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் மரிஷா டிஎஸ் கூறியுள்ளார்.
இதேவேளை கலாநிதி தயான் ஜெயதிலக, “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று நாட்டில் தேசிய பிரச்சினையொன்று இல்லையென்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பயணிக்கின்றார் என்று அண்மையில் கூறியிருப்பதும் ராஜபக்சக்களின் நூதனப் பேரினவாத உருமாற்றங்களாக ஜேவிபியினர் உள்ளனர் என்பது புலனாகிறது.
இது இனப்படுகொலையல்லவா!
சிங்கள ஆயுதப் போராட்டத் தரப்பான ஜேவிபியை தோற்கடித்த நாளை ஶ்ரீலங்கா அரசு ஏன் வெற்றி தினமாக கொண்டாடவில்லை என்று நிரோமிதுன் என்ற சமூக வலைத்தளப் பதிவர் எழுப்பியிருந்த கேள்வியைப் பார்த்தேன். மிகுந்த நியாயம் மிக்கது. ஏனெனில் முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் இறுதியில் உண்மையில் இன்றுதான் சுதந்திரம் கிடைத்த்து என்று இலங்கையின் ஆட்சியாளர்கள் கூறினார்கள்.
அத்துடன் கடந்த காலம் முழுவதும் தமிழர்களுக்கு எதிரான போர் வெற்றி நினைவுநாள் வருடம் தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. சிங்கள ஆயுதப் போராட்ட தரப்பான ஜேவிபியை தோற்கடித்தமைக்காக இதுபோன்ற வெற்றி தினத்தை அரசு கொண்டாடுவதில்லை. ஆனால் தமிழர்களை தோற்கடித்த தினத்தை மாத்திரம் ஶ்ரீலங்கா அரசு வெற்றிதினமாகவும் சுதந்திரதினமாகவும் கொண்டாடுகிறது.
வடக்கில் மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் திரண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். மக்களின் கண்ணீரில் முள்ளிவாய்க்கால் திடல் நினைந்தது. “இனப்படுகொலை நடக்கவில்லை என்று இந்த அரசு சொல்கிறது… உலகமே உனக்கு கண்ணில்லையா? இங்கு எங்கள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டது இனப்படுகொலையில்லையா என ஈழத் தாயொருத்தி முள்ளிவாய்க்காலில் மண்டியிட்டு கத்தி ஓலமிட்டவேளையில் அங்கிருந்தவர்களின் இதயங்கள் எல்லாம் நெருப்பாய் கொதித்த்தைக் கண்டேன்.
வடக்கிற்குச் செல்லும் நாள்
குடும்பம் குடும்பமாக போரில் கொல்லப்பட்டவர்களையும் குழந்தைகளை இழந்த தாய்மார்களையும் தாய் தந்தையர்களை இழந்த பிள்ளைகள் இன்று இளைஞர்களாயும் முள்ளிவாய்க்காலில் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சில சிங்கள இளைஞர்களும் கலந்துகொண்டார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வந்துசென்ற சிங்கள இளைஙர் ஒருவர், முள்ளிவாய்க்காலை ஒரு புண்ணியபூமி என்றும் தெற்கில் உள்ளோர் வடக்கிற்கு செல்ல மே 18 ஆம் திகதியே சிறந்த நாள் என்றும் பதிவிட்டமை ஈழத் தமிழர்களை நெகிழச் செய்துள்ளது. மறுபுறத்தில் இலங்கை அரசு பாரிய அளவில் போர்வெற்றி நினைவுதினத்தைக் கொண்டாடியுள்ளது.
ஒரு போர் இலங்கையின் வடக்கு கிழக்கில் இனவழிப்பின் துயரமாக நினைவுகொள்ளப்படுகின்ற நிலையில், தென்னிலங்கையில் போர் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிற வரையில் இந்த நாடு இரண்டுபட்டே இருக்கும்.
அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் கனடா இனப்படுகொலை நினைவுத் தூபி பற்றிய பதிவுகளின் கீழ் சிங்களப் பேரினவாதிகள் இடுகின்ற பின்னூட்டங்கள் அருவருக்கத் தக்கவையாக உள்ளன. அத்துடன் இந்தத் தீவில் உள்ள பேரினவாத்தின் கொடூர முகத்தைக் காட்டுகின்றன. இத்தகைய பேரினவாதிகளுடன் தமிழ் மக்கள் இணைந்து எப்படி வாழ்வது என்ற கேள்வியை எழுப்புகின்றது.
பன்னாட்டு விசாரணைக்கு ஏன் அச்சம்?
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று இலங்கை அரசு கூறினால் சிங்களப் பேரினவாதிகள் இப்படித்தான் செயற்படுவார்கள். ஆனால் போரில் ஈழ மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று இலங்கை அரசு கடந்த காலத்தில் கூறிவந்த நிலையில்தான், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை கனடா இன்று எற்றுக்கொண்டுள்ளது.
மேலும் சில நாடுகளிலுள்ள அரசியல் தலைவர்கள் இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து பேசவும் கரிசனை கொள்ளவும் தொடங்கியுள்ளனர். இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்த மறுப்பும், சிங்களப் பேரினவாதிகளின் இத்தகைய அணுகுமுறைகளும் உலகில் இன்னும் பல நாடுகளை இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளுகிற நிலைக்கு தள்ளச் செய்யும்.
இனப்படுகொலை என்று சொன்னாலே சட்ட நடவடிக்கை என்று சொல்லுகிற ஶ்ரீலங்கா அரசு, முதலில் பன்னாட்டு விசாரணைக்கு இணங்கி இனப்படுகொலை நடக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இனப்படுகொலை நடக்கவில்லை என்றால் ஏன் இலங்கை அரசு விசாரணைக்கு அஞ்சுகிறது.
இலங்கையில் நடந்த்து இனப்படுகொலை என்பதை வடக்கு கிழக்கு மக்கள் ஒரே குரலில் சொல்லி வருகிறார்கள். இந்தக் குரல் இன்று வடக்கு கிழக்கை தாண்டி தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் விவாதிக்கப்படுகிறது. ஆதரவுக் குரல்கள் எழுகின்றன. அநீதியான வகையில், போர் அறமற்ற வகையில் ஈழத் தமிழ் மக்கள்மீது நடந்த இனவழிப்புப் பேரூழிக்கு நீதி வேண்டும் என்ற ஈழத் தமிழினத்தின் பெருந்தாகம் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 23 May, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
