முத்து அணிவதால் இவ்வளவு நன்மைகளா..!
ஜோதிடத்தில் ஆபரணம் அணிவதற்கென்று தனியான சிறப்பம்சங்கள் காணப்படுகின்றது.
அதுபோலவே, ஜோதிடத்தில் முத்து அணிவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
ராசிக்கல்லில் ஒன்றாக பார்க்கப்படும் முத்து யார் அணியலாம், அதனால் என்ன நன்மை, யாரெல்லாம் அணியக்கூடாது என்பன போன்ற பல விடயங்களை இப்பதிவின் மூலமாக அறிந்து கொள்வோம்.
முத்து அணிவதன் நன்மைகள்
முத்து பதித்த ஆபரணம் அணிவதால் மங்களகரமான விஷயங்கள் நடக்கும். நம் மனதிற்கு அமைதி கிடைக்கும்.
வாழ்க்கையில் அனைத்து பிரச்னைகளும் மெல்ல மெல்ல குறையும். உங்களின் திருமண வாழ்க்கையும், காதல் உறவும் சிறப்பாக இருக்கும்.
முத்து ஜோதிட அம்சம்
முத்து சந்திரனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. சந்திர பகவான் மனதைக் குறிப்பவர் அதனால், மனோகாரகன் என சந்திரனை அழைக்கிறோம்.
முத்து நாம் அணிவதால் நம்முடைய மனதில் இருக்கும் எதிர்மறை சிந்தனைகள் நீக்கி அமைதியாக வைத்திருக்கும் என நம்பப்படுகிறது.
முத்துக்களை அணிவதன் மூலம் திருமண வாழ்க்கையில் துணையுடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பிரிவினைகள் நீங்கி துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். காதல் உறவு வலுப்பெறும். மாணவர்களுக்கு மன சிதறல் குறைந்து படிப்பில் மனம் ஈடுபடும்.
இருப்பினும் முத்து அணிவதற்கு முன் அதன் சில விசேஷ குணங்கள், அதை அணிவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
முத்து எந்த விரலில் அணிய வேண்டும்?
நீங்கள் வேலை செய்ய வலது கை பழக்கம் உள்ளவராக அல்லது இடது கை பழக்கம் உள்ளவராக இருக்கலாம்.
நீங்கள் எந்த கை அதிகம் வேலை செய்ய பயன்படுத்துகிறீர்களோ அந்த கையின் சுண்டு விரலில் முத்து அணிய வேண்டும்.
பெரும்பாலும் முத்துக்கள் வெள்ளியில் பதித்து அணியப்படுகிறது.
சில நேரங்களில் தங்க மோதிரங்களில் பதித்து அணியவும் பரிந்துரைக்கப்படுகிறது. இது உங்களுக்கு மன வலிமையைத் தரும். நினைவாற்றலைப் பெருக்கும்.
முத்து அணிபவதற்கு முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்
சுக்ல பட்சத்தின் வரக்கூடிய (வளர்பிறை) எந்த ஒரு திங்கட்கிழமைகளிலும் முத்து அணிவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
பெளர்ணமி தினத்தில் முத்து அணியலாம். ஜோதிட சாஸ்திரப்படி 7- 8 ரத்தினங்களுடன் சேர்த்து முத்துக்களை அணிவது நல்லது.
மேலும் முத்து அணிவதற்கு முன் நீங்கள் அதை கங்கை நீர் அல்லது பச்சை பசும்பாலில் 10 நிமிடம் ஊற வைத்து “ஓம் சந்திராய நம” என்று 108 முறை ஜெபித்து பின்னர் அணிவது விசேஷமானது.
எந்த ராசியினர் அணியலாம்?
சந்திரனை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து.
கடக ராசியினர் மட்டுமில்லாமல், எந்த ராசியை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு சந்திர திசை நடக்கும் காலத்தில் முத்து அணியலாம்.
சந்திர தசா முடிந்த பின்னர் அதை கழற்றிவிடலாம். இதனால் சந்திர தசா காலத்தில் இருக்கும் இடர்பாடுகள் நீங்கும்.
முத்து பலவீனமான சந்திரனை பலப்படுத்துகிறது. மேலும் அதை அணிபவருக்கு மன அமைதியைத் தருகிறது, அமைதியுடன் தைரியத்தையும் தருகிறது.
கடகத்தை தவிர சூரியன் ஆதிக்கம் கொண்ட குறிப்பாக மீனம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களால் அணியப்படுகிறது. ஏனெனில் இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். அந்த கோபத்தை கட்டுப்படுத்தும் விதமாக அணியப்படுகிறது.
