அன்னை பூபதியின் ஊர்தி பவனி -முதல்நாள் பயணம் நிறைவு
அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப்பவனி முல்லைத்தீவு மாவட்டத்தின் இன்று இரவு மல்லாவி நகரை வந்தடைந்துள்ளது
மல்லாவி நகரை ஊர்தி வந்தடைந்த போது கடுமையான மழை பெய்து வந்த நிலைமையிலும் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
மல்லாவி நகரை அடைந்தது
அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி இன்று மதியம் 01 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிட முன்றலில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளை கடந்து கிளிநொச்சி ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி நகரை அடைந்தது
தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் 65ஆவது காலாட்படையால் அபகரிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மாவீரர்களது உடலங்களை தாங்கிய முல்லைத்தீவு ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்னால் இராணுவ வாசலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாமனிதர் சிவநேசன் அவர்களது சமாதி முன் அஞ்சலி
தொடர்ந்து மல்லாவி அனிஞ்சியன்குளம் பகுதியில் இலங்கை ஆழ ஊடுருவும் படையின் தாக்குதலில் கொல்லப்பட்ட மாமனிதர் சிவநேசன் அவர்களது சமாதி அமைந்துள்ள இடத்திற்கு சென்று அங்கு அஞ்சலி இடம்பெற்றது
தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுடன் மாங்குளம் நகரை அடைந்து முதல் நாள் ஊர்தி பவனி மாங்குளம் நகரில் நிறைவடைந்துள்ளது
நாளை(18) காலை மாங்குளம் நகரில் இருந்து இரண்டாம் நாள் ஊர்தி பவனி ஆரம்பமாகி கனகராயன்குளம், புளியங்குளம், நெடுங்கேணி ஊடாக முல்லைத்தீவை சென்றடைந்து அங்கிருந்து திருகோணமலை ஊடாக நாளை மறுதினம் (19) மட்டக்களப்பு நகரை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












