மிகப்பெரும் திட்டத்தை வகுத்த பிபின் ராவத்! இந்தியாவையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய விபத்து
கடந்த 2016ஆம் ஆண்டு உரி இராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” நடத்த திட்டம் வகுத்தவர்களில் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத்தும் ஒருவரே.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
அந்த விபத்திலிருந்து கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். இந்தியாவையே பேரதிர்ச்சிக்குள்ளாகிய இந்த சம்பவம் குறித்து குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிபின் ராவத்தின் உடல் இன்று வெலிங்டன் பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டு நாளை டெல்லியில் இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.
பிபின் ராவத்
யார் இந்த பிபின் ராவத்? இவர் சிம்லாவில் செயிண்ட் எட்வார்டு பள்ளியில் படித்தார். இதையடுத்து மகாராஷ்டிராவில் கடாக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் படித்தார். உத்தரகாண்டில் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாதெமியில் பயிற்சி பெற்றார்.
கோர்கா ரெஜிமென்ட்
கோர்கா படைப்பிரிவில் இருந்து இராணுவ அதிகாரியானார். அங்கிருந்து இராணுவ தலைமை தளபதியான 4ஆவது அதிகாரி பிபின் ராவத் ஆவார். இந்திய இராணுவத்தின் தலைமை தளபதியாக 3 ஆண்டுகள் பதவி வகித்த இவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பு தான் முப்படைகளின் தலைமை தளபதியாக அறிவிக்கப்பட்டார்.
முதல் அதிகாரி
இந்த பதவிக்கு 2019 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பாதுகாப்பு துறையில் தற்போதுள்ள சவால்களை திறமையாக கையாளவும் இந்திய ஆயுத படைகளின் மறுகட்டமைப்பு செய்யவும் இந்த பதவி உருவாக்கப்பட்டது.
இந்திய இராணுவம், இந்திய விமான படை, இந்திய கப்பல் படை ஆகிய முப்படைகள் மீதும் இவர் கவனம் செலுத்தி பாதுகாப்பு ரீதியாக அரசுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்.
மியான்மர் எல்லை பிரச்சினை
இந்த பதவியுடன் சேர்த்து இவர் இராணுவ விவகாரங்களை துறை பணியையும் தலைமை தாங்கி நடத்தி வந்தார். பிரிகேட் கொமாண்டர், ஜென்ரல் ஆபிசர் கமாண்டிங் இன் சீஃப், கலோனல் செக்ரட்டரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை 40 ஆண்டுகளுக்கு மேலாக வகித்து நாட்டு சேவை செய்தவர். 2015 ஆம் ஆண்டு மியன்மாரில் எல்லை பிரச்சினையின் போது தலைமை தாங்கி இந்திய இராணுவ படையை வழி நடத்தினார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
உரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் மிக பெரிய பயங்கரவாத தாக்குதலாக பார்க்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவத்தால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இதற்கு திட்டம் வகுத்து கொடுத்தவர்களில் பிபின் ராவத்தும் ஒருவராவார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றால் என்ன
சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்பது எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து நடத்தும் அதிவேக தாக்குதல் நடவடிக்கை. அத்துடன் தாக்குதலில் நடத்தும் குழுவிற்கு மிக குறைந்த ஆயுதங்களும் குறைந்த அளவுக்கு வீரர்களுக்கு சேதமும் இருக்கும்.
இதை நடத்துவதற்கு முறையான திட்டமிடல் மற்றும் சிறந்த செயலாக்கம் தேவை. அதை செய்து முடித்தவர்களில் பிபின் ராவத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.