லண்டனில் டயஸ்போறாவுடன் பாஜக
இந்தியாவின் ஆளும் தரப்பாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை 6 நாட்களுக்குரிய பயணமாக கடந்த வியாழன் முதல் பிரித்தானியாவில் தங்கியிருக்கின்றார்.
அவ்வாறு பிரித்தானியாவில் தங்கி தனது நிகழ்ச்சி நிரலை நகர்த்தும் அண்ணாமலை நேற்று லண்டனில் ஈழத் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக பங்கெடுத்த நிகழ்வு ஒன்றில் கருத்துரைத்தபோது, இலங்கையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுடன் கூடிய 13 ஆம் திருத்தத்தை வழங்க இந்தியா துணை புரியும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
டெல்லியின் வியூகங்கள்

அத்துடன், 2009 ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பெரும் போரை நடத்திய போது, அதனைத் தடுப்பதற்கு அப்போதைய இந்திய மத்திய அரசு (காங்கிரஸ் காங்கிரஸ் - திமுக கூட்டணி) தவறியதாகவும், அப்போது பாரதிய ஜனதா கட்சி அவ்வாறான நிலையை எதிர்த்ததாகவும் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் அடுத்த வருடம் பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் கடந்த 9 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு விளக்கங்களை வழங்கி, அடுத்த வருட பொது தேர்தலிலும் தமது ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கான வியூகங்களை நகர்த்தி வருகிறது.
டெல்லியின் வியூகங்களின் ஒன்றாகவே பாஜக தலைவரின் இந்தப் பயணம் “தமிழராய் இணைவோம் - என் மண் என் மக்கள்” என்ற கருப்பொருளில் சந்திப்புக்களாக பிரித்தானியாவில் இடம்பெற்றுக் கொள்கின்றன.
லண்டன் மற்றும் பேர்மிங்காம் பகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்துடன் சந்திப்புகளை நடத்திவிட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி அன்று அண்ணாமலை மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளமை குறிப்பிடத்தக்கது.