உரிமைப் போராட்டத்தின் இறுதி நாளில் அலையெனத் திரள்வோம் - மட்டுவிலிருந்து அறைகூவல்!
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய உரிமைக்கான போராட்டத்தில் தாமும் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், தாயக மக்களும் அணி திரள வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு கிழக்கு பல்கலைகழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் (N2E) இந்த மாபெரும் பேரணியானது நாளை செவ்வாய்க்கிழமை (07.02.2023) காலை 9 மணி அளவில் மட்டக்களப்பு வெருகலை சென்றடையவுள்ளது.
மட்டக்களப்பு நோக்கிய பேரணி
அந்த பேரணியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து செல்வோர் மு.ப.10, மணிக்கு கதிரவெளியில் இணைந்து கொள்வார்கள். அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தரும் மற்றுமொரு பேரணி மு.ப. 11 மணியளவில் பெரியகல்லாற்றை தாண்டி பி.ப. 1.30, மணிக்கு களுதாவளை பிள்ளையார் கோயில் சந்தியில் சந்திப்பதோடு, அங்கு மேலும் பலர் இணைந்து கொண்டு அங்கிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பேரணி சென்று பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவை சென்றடையும்.
தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு அழைப்பு
அங்கு பேரணிதொடர்பான பிரகடனம் வாசிக்கப்பட்ட பின்னர் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நிறைவு பெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்தப்பேரணியில் தமிழ்தேசிய உணர்வாளர்கள், தமிழ்தேசிய அரசியல் கட்சி சார்ந்தவர்கள், இலங்கை தமிழரசுகட்சி சார்ந்தவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மகளீர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள், என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கரி நாள் பேரணி
இலங்கையின் 75, வது சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள் துக்கநாள் என்பதால் வடக்குகிழக்கை ஒன்றிணைத்து இந்த பேரணி கடந்த (04.02.2023) சுதந்திர தினத்தன்று யாழில் ஆரம்பித்து எழுச்சியுடன் இந்த பேரணி நாளை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நிறைவுறும்.
இந்த நிகழ்வில் தமிழர் என்ற உணர்வுடன் எல்லோரும் கலந்து கொள்வோம். என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.