சுதந்திர தின நிகழ்வு - யாழ் வரும் ரணிலுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் - சிவாஜி எச்சரிக்கை!
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு இம்மாத இறுதிக்குள் உடனடியான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் மற்றும் ஜனநாயகப் போராட்டங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு தனது எதிப்பினையும் வெளியிட்டுள்ளார்.
எம்.கே சிவாஜிலிங்கம் எச்சரிக்கை
இதேவேளை, தாமதிக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, வேலன் சுவாமிகளின் கைது போன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எம்மை எந்த சட்டத்தின் மூலமும் கைது செய்யலாம், அதற்காக நாங்கள் பயம் கொள்ளவில்லை, தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் நீண்டகால போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இலங்கை அரசாங்கம் உள்ளது, இனியும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது.
இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரசிங்க தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்காவிடின், அவர் செல்லும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை ஆரம்பிப்போம் என சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.
யாழ் வரும் ரணில்
இலங்கை அதிபர் வருகின்ற மாதம் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக யாழ்ப்பாணம் வருகை தர உள்ளார், இந்தநிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்படாவிடின் குறித்த தினத்தில் மக்களை திரட்டி கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
