முல்லைத்தீவில் பாரிய கருங்கல் அகழ்வு - காடழிப்புடன் இடம்பெற்று வரும் கனியவளச்சுரண்டல்
இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் என்று இயற்கை உரக்கப் போதித்தாலும் நாங்கள் செவிமெடுப்பதாக இல்லை.
நாங்களே இயற்கையை ஆளப்பிறந்தவர்கள் என்ற மமதையில் இயற்கையைத் தொடர்ந்தும் அடிமைப்படுத்துகிறோம்.
நிலத்திற்கு நீரைப்பருக்கும் வாய்களான குளங்களை இறுக்கி மூடியும், வெள்ள வாய்க்கால்களைக்கூட விட்டு வைக்காமல் கம்பள வீதிகளாக்கியும், சதுப்பு நிலங்களைக் குடியிருப்புகளாக்கியும் இயற்கையை எமக்கு ஏற்றவகையில் கட்டமைத்து வருகிறோம்.
தற்போதைய மனிதனை விட புத்திக்கூர்மையுள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின் போது எதிர்காலத்தில் தோன்றினாலும் அவனாலுங்கூட இயற்கையை ஒருபோதும் வெல்ல முடியாது.
இயற்கையோடு இணைந்து இசைவுற வாழ்தலே இயற்கைப் பேரழிவுகளிலிருந்து நாங்கள் தப்புவதற்கான ஒரே வழிமுறையாகும்.
இதனை நன்கறிந்தவர்களாக தமிழீழ விடுதலைப்புலிகள் காலப்பகுதியில் இயற்கையை பாதுகாப்பதற்கான பல்வேறு வழிவகைகளை கையாண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமன்றி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களெங்கும் குறிப்பாக காடுகளை அழிப்பதை விடுத்து காடுகளை வளர்த்து வந்தனர்.
அதுமாத்திரமின்றி இயற்கைக்கு பாதகமான பல்வேறு விடயங்களுக்கான மாற்று வழிமுறைகளை கையாண்டனர்.
இவ்வாறான பின்னணியில் 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகளைத் கடந்துவிட்ட இன்றைய காலத்தில் இயற்கை வளங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரியளவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையான ஒரு விடயம்.
இன்றைய சூழலில் இயற்கையை அழிப்பதற்கு பலர் முண்டியடிக்கின்றனர் ஆனால் மாறாக இயக்கையை பாதுகாப்பதற்காக சட்டம் சந்தவர்களோ மக்களோ முன்வரவில்லை என்பதே இயற்கையை நேசிக்கின்ற பலரின் குற்றச்சாட்டாக காணப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரை கருங்கல் அகழ்வு, கிரவல் அகழ்வு, மணல்அகழ்வு, காடழிப்பு, என பல்வேறு வழிகளில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன.
அபிவிருத்தி என்பது மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருப்பினும் இந்த அபிவிருத்தி பணிகளுக்காக முறைக்கேடாக இடம்பெறும் இயற்கை வள சுரண்டல்கள் மக்களை பாரிய இயற்கை அனர்த்தங்களுக்குள் கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வகை தொகையின்றி இடம்பெறும் கருங்கல் அகழ்வு நடவடிக்கை காரணமாக பாரிய சூழல் பிரச்சினைக்கு குறித்த பகுதி மக்கள் முகம்கொடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் இடம்பெறுகின்ற இந்த கருங்கல் அகழ்வு நடவடிக்கையின் காரணமாக பாரியளவில் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த கருங்கல் அகழ்வு பணிகள் இடம்பெறுவதனால் பாரிய காடழிப்பு நடவடிக்கை இடம்பெறுகின்றது.
அதே வேளையில் குறிப்பிட்ட இடத்திலே உரிய நிபந்தனைகள் மீறப்பட்டு வெடி மருந்துகள் பாவிக்கப்படுகின்ற காரணங்களால் அருகில் உள்ள வீடுகளில் வெடிப்பு சம்பவங்கள் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் உள்ள கற்பவதிகள் சிறுவர்கள் வயோதிபர்கள் பாதிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இதனை விடவும் குறிப்பாக கருங்கல் அகழ்வு நடைபெறும் இடத்தினை அண்டிய பகுதிகள் விவசாய கிராமங்களாக இருக்கின்ற நிலையில் அதிகளவான ஆழத்தில் கிடங்குகள் தோண்டப்படுவதன் விளைவாக குறித்த பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் வற்றி போகின்ற நிலைமை காணப்படுகிறது.
இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர் குறிப்பாக இந்த கருங்கல் அகழ்வு நடவடிக்கைகளோடு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம், வளவள பாதுகாப்பு திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பிரதேச செயலகம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்கள் தொடர்புபட்டிருந்தாலும் ஒருவரை ஒருவர் சாட்டிக் கொண்டு இந்த கருங்கல் அகழ்வு நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் சூழல் சுற்றுச் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என்றே குற்றம் சாட்டப்படுகிறது.
குறிப்பாக இந்த பகுதியில் தொடர்ச்சியாக கருங்கல் அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்ளும் இரண்டு கொம்பனிகள் அவர்களுடைய அனுமதி பத்திர விதிமுறைகளை மீறி பாரிய அளவில் குழிக்கள் தோண்டப்பட்டு இந்த கருங்கல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தாலும் இன்று வரை இதற்கான உறுதியான எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இவற்றையும் கடந்து ஈழத் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடையதும், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடையதுமான வாவெட்டி மலை இதனால் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொல்பொருள் வலயமாக காணப்படும் இந்த மலையில் பாரிய அளவில் கருங்கல் அகழ்வு இடம்பெற்றுச் செல்கின்ற போதும் தொல்பொருள் திணைக்களம் கூட இங்கே இருக்கின்ற தமிழர்களின் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட குறித்த பிரதேசத்தை அண்மித்த பகுதியில் இடம்பெறுகின்ற கருங்கல் அகழ்வு நடவடிக்கைகள் தொல்பொருள் சான்றுகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலைமை இருந்தும் அவர்கள் கூட இந்த விடயத்தில் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள்.
குறிப்பாக இந்த விடயம் தொடர்பிலே தொடர்ச்சியாக அபிவிருத்தி குழு கூட்டங்களிலே பேசப்பட்டு வந்தாலும் இதற்கு இன்று வரை தீர்வுகள் எட்டப்படவில்லை.
தொடர்ச்சியாக இங்கு இடம் பெறுகின்ற இந்த கருங்கல் அகழ்வு நடவடிக்கையானது எதிர்காலத்தில் குறித்த கருங்கல் அகழ்வு இடம்பெறுகின்ற இந்த இடத்தை அண்டிய மக்களுக்கு பாரிய ஒரு பிரச்சினையாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
எனவே இந்த விடயங்களை உரியவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது அந்த மக்களினுடைய கோரிக்கையாக இருக்கின்றது.
