அக்குரணையில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட துப்பாக்கி சூட்டு எச்சரிக்கை
சிறிலங்கா காவல்துறையினருக்கு கிடைத்த அனாமதேய தொலைபேசி அழைப்பையடுத்து கண்டி மாவட்டத்தின் அக்குறனை பள்ளிவாசலுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.
குறித்த பள்ளிவாசலில் குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களும் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கிடமாக எவரும் நடமாடும் பட்சத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டி அக்குரணை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என 119 என்ற சிறிலங்கா காவல்துறையின் அவசர தொடர்பாடல் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அக்குறனை காவல்துறையினர் அக்குறனை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்
இதனையடுத்து அந்த பிரதேசத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதேச மக்களை அவதான இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகத்திற்கிடமாக எவரும் புதியவர்கள் நடமாடும் பட்சத்தில் தமக்கு உடனடியாக அறியத்தருமாறும் காவல்துறையினர் கோரியுள்ளதுடன், பள்ளிவாசல் நிர்வாகத்தினரை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை உந்துருளியில் செல்பவர்களை தாம் மறிக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இல்லாவிடின் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்ததாக அக்குறனையிலுள்ள நுயிஸ்தீன் எனும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக காவல்துறை
இந்த நிலையில், காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சிறிலங்கா இராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிஹேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்
குறித்த பகுதியில் மேலதிக காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
