பயங்கரவாத சட்டமூலம் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா அரசு விளக்கம்
சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
குறித்த சட்ட வரைபில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில், இராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போது தெளிவுபடுத்தப்பட்டதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
சட்டத்தில் திருத்தங்கள்
அரசாங்கம் கடந்த ஆண்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதையடுத்து, அதன் சில பிரிவுகள் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தன.
இதையடுத்து, குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இராஜதந்திரிகளுக்கு கூறியுள்ளார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபு
சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றி தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபை அரசாங்கம் தயாரித்திருந்தாக இந்த சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தற்போது பொது மக்கள், குடிசார் சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புகள் வெளிப்படுத்திய கருத்துக்களை உள்வாங்கி, இந்த சட்டத்தின் புதிய வரைபை தயாரிக்க திறந்த ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக அலி சப்ரி கூறியுள்ளார்.