மாகாணசபையை சிறுமைப்படுத்த வேண்டாம்! வடக்கு ஆளுநருக்கு தெரிவிப்பு
மாகாணசபையின் அதிகாரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்து மாகாணசபையை சிறுமைப்படுத்த வேண்டாம் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வடக்கு மாகாண ஆளுநருக்கு எடுத்துரைத்துள்ளது.
இது குறித்து அந்த கூட்டணி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
மாகாணசபை சட்டம்
அறிக்கையின் முழுவிபரம் வருமாறு, “கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநர் யாழ்ப்பாணம் வன்னி மாவட்டங்களைச் சேர்ந்த ஜேவிபி என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாகாணசபை பொறுப்புகளை கையளித்துள்ளதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

கல்வி, விவசாயம், சுகாதாரம், உள்ளுராட்சி சபைகள் போன்ற பல்வேறுபட்ட பிரிவுகளுக்கு ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்துள்ளதாக அறிய முடிகின்றது.
மாகாணசபை அதிகாரங்களை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களே கையாளலாம் என்பதுடன் மாகாணசபை இயங்காத காலத்தில் அந்த அதிகாரங்களை ஆளுநர் முன்னெடுத்துச் செல்வார் என்பதைத்தான் மாகாணசபை சட்டம் கூறுகின்றது.
மாகாணசபைகள் சட்டத்தின் எந்த இடத்திலும் ஆளுநர் தனது அதிகாரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கையளிக்கலாம் என்றோ அல்லது மாகாணசபை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாம் என்றோ கூறப்படவில்லை.
சட்டம் அவ்வாறிருக்க, ஆளுநரானவர் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்களை மேற்குறிப்பிட்ட விடயதானங்களுக்குப் பொறுப்பாக நியமிப்பதென்பது சட்டவிரோதமானதும் தவறானதுமான நடவடிக்கையாகும்.
நிர்வாகச் சீர்கேடு
வடக்கு மாகாணத்தில் வேறு தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஓரம்கட்டி ஆளும் கட்சி உறுப்பினர்களை இதற்குள் கொண்டுவந்து நுழைப்பதென்பது ஜேவிபி தனது கட்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல மாகாண நிர்வாகத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

மேற்கண்ட இந்த விடயமானது வடக்கு மாகாணத்தில் மாத்திரம்தான் நடைபெறுவதாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது. நீண்டகால நிர்வாக அனுபவங்களைக் கொண்ட ஆளுநர் ஜேவிபியின் இந்த தவறான நடவடிக்கைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, அதனை ஏற்றுக்கொண்டு செயற்படுத்துவதென்பது பின்னொரு காலத்தில் ஏற்படவிருக்கும் விசாரணைகளில் ஆளுநரும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு துணைசென்றார் என்பதையும் அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளும் அவரையே சாரக்கூடும்.
மாகாணசபை தேர்தல்களை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் நிர்வாகத்தைக் கையளிக்க வேண்டும் என்பதை அரசுக்கு எடுத்துச் சொல்வதை விடுத்து, அரசு செய்யும் பிழையான காரியங்களுக்கு முண்டுகொடுப்பதோ, செயற்படுத்துவதோ அறிவுபூர்வமான விடயமல்ல.
தமிழ்த் தேசிய உரிமை அரசியலில் ஈடுபாடு கொண்டவராக கடந்த காலங்களில் தன்னைக் காட்டிக்கொண்ட ஆளுநர் அண்மைக்காலத்தில் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமாக முன்னெடுக்கப்படும் விடயங்கள் எதனையும் கண்டுகொள்ளாமல் தவறான முடிவுகளின்பால் செல்ல வேண்டாம் என்பதை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்துக்கொள்கின்றது.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 6 மணி நேரம் முன்