பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் - எச்சரிக்கும் பிரித்தானியா
உக்ரைன் மீது படையெடுப்பு நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டால், பாரிய பொருளாதார தடைகளை எதிர்நோக்க வேண்டிவரும் என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் லிஸ் ட்ரஸ் (Liz Truss) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் மீது மேற்கொள்ள எத்தனிக்கும் படை நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்கு பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
உக்ரைனுக்கு எதிரான படை நடவடிக்கைக்கு எதிராக, வலுவான நிலைப்பாட்டில் பிரித்தானியா இருப்பதாகவும் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யா படை நடவடிக்கையினை எடுக்குமாயின் அது ஒரு மூலோபாய தவறாக இருப்பதுடன், பாரிய விளைவுகளையும் சந்திக்க நேரிடும் எனவும் லிஸ் ட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லைப் பகுதியில் இராணுவப் பதட்டம் நிலவி வருகின்றது.
எல்லைப் பகுதியில், ரஷ்யா படைக்குவிப்பினை மேற்கொண்டுவரும் நிலையில், உலக நாடுகள் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.