தமிழ் எம்.பிக்களுக்கும் நிதி ஒதுக்கீடு! கோடிக் கணக்கில் கொடுக்கும் இலங்கை அரசு
அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர, வடக்கு, கிழக்கிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இவ்வருடம் ஐந்துகோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021-2023 வரையான மூன்று வருட காலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த ஒதுக்கீடுகள் வழங்கப்படாத நிலையிலேயே, இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
காலதாமதம்
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராஜபுத்திரன் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்காக ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா ஐந்து கோடி ரூபா நிதி, அதிபர் செயலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், இராஜவரோதயம் சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தவராசா கலையரசன் ஆகியோர், காலம் தாழ்த்தி தமது முன்மொழிவுகளை அனுப்பிவைத்ததால், அவர்களுக்கான ஒதுக்கீடுகளை அனுமதிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |