எல்லை மீறியது அரசியல் பேச்சு - நடத்துனரை குத்திக் கொன்ற பேருந்தின் சாரதி
மொனராகலையில் இருந்து கட்டுநாயக்க வரை இயங்கும் இ.போ.ச தொலைதூர சேவை பேருந்தின் நடத்துனர் இன்று (ஜன. 24) காலை பேருந்து சாரதியின் கண்ணாடி போத்தல் தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த பேருந்து மொனராகலையில் இருந்து காலை 05:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02:30 மணியளவில் கட்டுநாயக்கவை சென்றடையும் என்றும், மறுநாள் காலை 05:00 மணிக்கு மொனராகலை நோக்கி புறப்படும் வரை கட்டுநாயக்கவில் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கு காரணமான அரசியல் பேச்சு
நேற்று (ஜன. 23) இரவு 07.30 மணியளவில் இருவரும் சாப்பிடுவதற்கும், மது அருந்துவதற்கும் தயாரான நிலையில் அரசியல் உரையாடலை ஆரம்பித்துள்ளனர். பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், பேருந்தின் சாரதி தனது கையில் இருந்த போத்தலை உடைத்து நடத்துநரின் கழுத்தில் தாக்கினார்.
தாக்குதலில் படுகாயமடைந்த 38 வயதான நடத்துனர் கட்டுநாயக்க காவல் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்த பின்னர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் கட்டுநாயக்க காவல்துறைக்கு அறிவித்துள்ளது.
சாரதி கைது
தாக்குதலை நடத்திய 36 வயதுடைய சாரதி கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதியும் நடத்துனரும் மொனராகலை மகந்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
