நடுங்க வைக்கும் செம்மணி: புதைகுழியிலிருந்து வரும் கைக்குழந்தைகள் - கனடா கடும் கண்டனம்
இலங்கை (Srilanka) உள்நாட்டு போரின் போது தங்களின் உறவுகள் காணாமல் போவது தற்செயலாக இடம்பெற்றது இல்லை என்பதை செம்மணி மனிதப் புதைகுழி நிரூபித்துள்ளது என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியர் (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன என பியர் பொய்லியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கறுப்பு ஜூலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதைகுழியிலிருந்து கைக்குழந்தைகள்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ் பாரம்பரியத்தைக் கொண்ட கனேடியர்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருவதற்கு தயாராகும் இவ்வேளையில் நாங்கள் மீண்டுமொரு முறை இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் ஈவிரக்கமற்ற பாரம்பரியத்தை எதிர்கொண்டுள்ளோம்.
இலங்கையில் செம்மணி மனிதபுதைகுழி அகழ்வுகள் ஆரம்பமாகி இந்த வாரத்துடன் ஒரு வாரமாகின்றன.
இந்த மனித புதைகுழியிலிருந்து கைக்குழந்தைகள் எனக் கருதப்படும் உடல்கள் உட்பட தமிழர்களின் பெருமளவு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன.
வழமையான கட்டுமானபணியாக ஆரம்பித்தது - நடுங்க வைக்கும் கண்டுபிடிப்பாக மாறியது - தொழிலாளர்கள் நிலத்துக்கடியில் மனித உடல்களை கண்டுபிடித்தனர்.
கண்கள் கட்டப்பட்டு கொலை
நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக தற்போது ஆழமற்ற மனித புதைகுழிகள் கண்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள், சிறுவர்கள் தனிப்பட்ட ரீதியில் எதிர்கொண்ட பாதிப்புகள் - விளையாட்டுப் பொருட்கள், புத்தக பைகள் ஆடைகள் தெரியவந்துள்ளன.
ஈவிரக்கமற்ற தன்மை ஆழம் காண முடியாதது. தமிழ் கனேடியர்கள் தங்கள் இதயங்களில் பல தசாப்தங்களாக அறிந்திருந்த விடயங்களை - அதாவது இலங்கையின் உள்நாட்டு போரின் போது தங்களின் உறவுகள் காணாமல் போவது தற்செயலாக இடம்பெற்றது இல்லை என்பதை - செம்மணி மனித புதைகுழி நிரூபித்துள்ளது.
அவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள் - மௌனமாக்கப்பட்டார்கள் - இரகசியமாக புதைக்கப்பட்டார்கள். உயிர்தப்பியவர்களிற்கு உறுதியான ஆதரவை வழங்க வேண்டிய பாரிய அநீதிகள் எங்கு இடம்பெற்றாலும் நீதிக்கான தேடலில் உறுதியாக இருக்க வேண்டிய தார்மீக பொறுப்பு கனடாவிற்குள்ளது.
மிக நீண்டகாலமாக இந்த சுமையை சுமக்கும் இங்குள்ள மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
