ரஷ்ய விமானங்களுக்கு கனடாவும் விதித்தது தடை
பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து, இத்தாலியை தொடர்ந்து ரஷ்ய விமானங்களுக்கு தங்கள் வான் வெளியில் பறக்க தடை விதித்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவின் மோதல் போக்கை கண்டித்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
மேலும் ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்கக்கூடாது என்று உக்ரைனை சுற்றியுள்ள நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளன.
இந்த நிலையில், தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வரும் என்றும், உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ரஷ்யாவை பொறுப்பேற்க வைப்போம் என்றும் கனடாவின் போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே போல்டிக் நாடுகள், போலந்து, செக் குடியரசு, பல்கேரியா, ருமேனியா, இத்தாலி மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு மேலே உள்ள வான்வெளியில் தனியார் ஜெட் விமானங்கள் உட்பட ரஷ்யாவிற்கு சொந்தமான விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல இங்கிலாந்து வான்வெளியில் பறக்கவும் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
