உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய தீர்மானம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (06) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால், வேட்புமனுக்களை ரத்து செய்துவிட்டு வேட்புமனுவை மீண்டும் அறிவிப்பதே சிறந்தது என ஆலோசனைக் குழுவில் கலந்துகொண்ட கட்சி மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரத்துச் செய்யும் சட்டமூலம்
இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்டு, 80,672 வேட்பாளர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
