நாமலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
க்ரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபரால் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு வழங்கப்பட்டன.
நீதிபதியின் உத்தரவு
முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நாட்டு ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று, குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, சட்டமா அதிபரால் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில், 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் ஏற்பாட்டாளராக இருந்த தற்போதைய அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்