ஊழியர்களின் சம்பள உயர்வு : தெளிவூட்டல் அறிக்கையை வெளியிட்ட மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான கருத்துக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த விசயங்கள் தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கைகளுக்கு இலங்கை மத்திய வங்கி பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையிலேயே இந்த தெளிவூட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மத்திய வங்கி அதன் செயற்பாடுகளில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.
மத்திய வங்கிச் சட்டம்
கடந்த 21 திகதியன்று இடம்பெற்ற கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளும் குழு, உரிய நாடாளுமன்றக் குழு மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாடுவதற்கான வாய்ப்பை முறையாகக் கோருமாறு ஆளுநருக்கு உத்தரவிட்டிருந்தது.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 80 (2) (b) க்கு இணங்க இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இது முப்பெரும்பான்மையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அண்மைய சம்பளத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள 2024-2026 காலகட்டத்தை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய செயன்முறை மற்றும் நியாயத்தை தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கான சம்பளம்
இது தொடர்பான எழுத்துப்பூர்வ கோரிக்கையினை கடந்த 22 ஆம் திகதியன்று, மத்திய வங்கியின் ஆளுநர் அதிபரிடம் சமர்ப்பித்தார், அவர் நிதி அமைச்சராக இருப்பதால் இந்த விடயத்தில் அதிபர் மத்திய வங்கி நாடாளுமன்றத்துடன் தொடர்பு கொள்ளும் வழித்தடமாக செயற்படுகின்றார்.
இந்நிலையில் இந்தக் கோரிக்கையானது இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்களுக்கான சம்பளத்தினை மாற்றியமைப்பதற்கான காரணிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்க ஒரு வாய்ப்பை கேட்கும் முகமாக அமைந்துள்ளது.
மத்திய வங்கியினால் கோரப்பட்ட வாய்ப்பு வழங்கப்பட்டதன் பின்னரோ அல்லது தகவலுக்கான முறையான கோரிக்கையைப் பெற்ற பின்னரோ சம்பளத் திருத்தத்திற்குப் பின்னால் எடுக்கப்படும் முடிவு மற்றும் செயன்முறைக்கு விளக்கங்கள் மற்றும் நுண்ணறிவுகளை வழங்குவதற்குத் தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்துவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |