இன்றைய தொழிற்சங்க நடவடிக்கை - வடக்கில் பாதிக்கப்பட்டுள்ள பல சேவைகள்!
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டும் போராட்டத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், வடக்கு மாகாணத்திலும் பல பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
இதனால், பாடசாலைக்கு வந்த மாணவர்களும் பாடசாலை இல்லை என தெரிவிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
யாழில்
ஆசிரியர் சங்கத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டும் போராட்டத்தின் காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
வவுனியா
நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட ஆசிரியர்களும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
பாடசாலைகளுக்கு ஒரு சில ஆசிரியர்களும், மாணவர்களும் வருகை தந்திருந்த நிலையில் தவணைப்பரீட்சைகளும் பிற்போடப்பட்டிருந்தது.
இதேவேளை, பாடசாலைகளின் பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்ததுடன் மாணவர்கள் திரும்பி சென்றதையும் அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு
இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல தொழிற் சங்க பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வெளி நோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை.
அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே இயங்குகிறது, இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதேவேளை, பாடசாலைகளில் ஆசிரியர்கள் சமூகமளிக்காததால் பாடசாலைகள் இயங்கவில்லை, பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக மிகக் குறைவான அளவில் காணப்பட்டது.
வங்கி ஊழியர்கள் பகிஸ்கரிப்பு காரணமாக வங்கி சேவைகள் இடம்பெறவில்லை
புகையிரத ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டதன் காரணமாக புகையிரத சேவை இடம்பெற்று வருகின்றதுடன், அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
