மட்டக்களப்பின் முக்கிய எரிபொருள் நிலையத்தை செயலிழக்க வைக்க திட்டம்!
மட்டக்களப்பு களுவங்கேணி மண்ணெண்னை எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் செயலிழக்க வைத்து மூடவைக்கும் செயற்பாட்டினை நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் முயற்சித்து வருவதாக ஈ.பி.டி.பி. கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
இதன்காரணமாக, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
காத்தான்குடியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்தை செயலிழக்க வைத்து அதனை ஹோட்டலாக மாற்றியமை மற்றும் கல்லாற்றில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் செயலிழந்து கிடப்பதை போல தற்போது இயங்கி வரும் களுவங்கேணி மண்ணெண்னை எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் செயலிழக்க திட்டமிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசத்துக்கு மகுடம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “மகிந்த ராஜபக்ச காலத்தில் தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர்களின் வளர்ச்சிக்காக 9 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்பட்டது.

இதில் 7 எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டது அதன் பொருட்கள் திருடப்பட்டு செயலிழந்து மீண்டும் உருவாக்க முடியாத நிலையில் கிடக்கின்றது.
களுவங்கேணியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் இருப்பதை அறிந்து நான் 30 இலட்சத்துக்கு மேற்பட்ட பணத்தை செலவு செய்து கடற்றொழிலாளர் சங்கத்திடம் இருந்து 5 வருட குத்தகைக்கு பெற்று அந்த எரிபொருள் நிலையத்தை மீள் இயக்கத்துக்கு கொண்டுவந்து இயக்கி வருகின்றேன்.
நான்கு ஆண்டுகள் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி நான் செயற்படுத்தி வந்தேன், இந்நிலையில் இரா.சாணக்கியன் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை அவரது பினாமிகளுக்கு எடுத்துக் கொடுக்கும் முயற்சியை கடந்த 2025 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக அபிவிருத்தி குழு கூட்டங்களில் பொய் தகவல்களை கொடுத்து அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளபார்க்கின்றார்.
அதேவேளை அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரா.சாணக்கியன் முயலை கொண்டு சென்று அதற்கு 3 கால் என்று சொன்னால் அங்குள்ள உறுப்பினர்கள் அனைவரும் 3 கால் என தெரிவிக்ககூடாது அதனை விசாரணை செய்ய வேண்டும் .
அதிகாரம்
இயங்கிவரும் களுவங்கேணி மண்ணெண்ணையை எரிபொருள் நிரப்பு நிலையத்தை இரா.சாணக்கியன் தனது அதிகாரத்தை வைத்து அப்போதைய கடற்றொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளரான குரூஸ் உடந்தையாக செயற்பட்டு கடந்த வருடம் ஜூலை மாதம் மண்ணெண்ணை விநியோகத்தை துண்டித்தார்.

அது மட்டுமல்ல அவர் தொடர்ச்சியாக அபிவிருத்தி குழு கூட்டத்தில் தவறான தகவல்களை வழங்கி வந்தார் இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் உட்பட்டவர்களுக்கு அறிவித்தேன்.
அவர்கள் அது தொடர்பாக எல்லா ஆவணங்களை பார்வையிட்டு மீண்டும் ஒரு வருடத்துக்கு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இயக்குமாறு கடற்றொழில் நீரியல் வள பணிப்பாளர் ஜெனரல் கடித மூலம் எனக்கு அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதிவரை செயல்படுத்த அனுமதியளித்துள்ள நிலையில் எனது உடன்படிக்கை முடிவடைய முன்னர் சாணக்கியன் அவரது பினாமிக்கு எடுத்து கொடுப்பதற்காக தொடர்ச்சியாக என் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி எனது மண்ணெண்ணை விநியோகத்தை துண்டித்துள்ளார்கள்.
என்னை பழிவாங்க வேண்டும் என நான் இயக்கிவரும் களுவங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அதனை மூடவைத்து அதன் மூலம் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வரும் வருமானத்தை இல்லாமல் செய்யும் செயற்பாட்டினை இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.” என அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |