தள்ளாடும் தமிழ் தாத்தாக்களின் கட்டில் அரசியல் நாடகங்கள்..!
"தள்ளாடும் தமிழ் தாத்தாக்களுக்கு ஏன் இந்த போலி அரசியல் வாழ்க்கை. வயது போன காலத்தில் வீட்டில் ஓய்வெடுக்கலாம்."
இப்படி தமிழ் இளைஞர் சமூகத்தினர் கிண்டலடித்து வருகின்றனர். கிண்டலடித்தாலும் உண்மையைத்தான் அவர்கள் கூறுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து நாடாளுமன்றத்தில் உள்ள இருக்கைகளை சூடேற்றியதற்காக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வரும்.
அது போக கோடி கோடியாய் சேர்த்து வைத்த சொத்துக்கள் இருக்கு. இருக்கப்போறது இன்னும் கொஞ்ச காலம்தான். சேர்த்து வைத்த காசுகளை எல்லாம் யார் அனுபவிக்கிறது.
இனியும் தமிழ் மக்களை ஏமாற்றி, வாக்கு சேர்ப்பதற்காக போடும் கபட நாடகங்களை நிறுத்திவிட்டு வீட்டில் ஓய்வெடுக்கலாம்.
தீபாவளித் தாத்தா
இறுதி யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது, பள்ளிகூடத்து பிள்ளைகள் மாதிரி மாறி மாறி அடிபட்டு வருடம் ஒரு கட்சி என்று 14 தமிழ் கட்சிகளுக்கு மேல் வந்துவிட்டது.
தீபாவளிக்குள் தீர்வு, பொங்கலுக்குள் தீர்வு என்று சொல்லி 90 வயசில கதிரையில இருந்தபடியே வாயை அசைத்து வெத்திலை போட்டுக்கொண்டு இருக்கிறார் ஒரு தாத்தா.
அந்த தாத்தாவின் சொந்த இடத்தில் தான் அதிகமாக தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது, செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது, அதையே கண்டுகொள்ளாதவர் எந்த தீபாவளிக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கப்போகிறார்.
இது இப்படி இருக்கையில், தற்போது தமிழரசு கட்சிக்குள் தடாலடி மாற்றங்களை செய்துள்ளாராம், அரசியல் குழுவை அவசரமாகக் கூட்டுகிறாராம், பிரத்தியேக இணைப்பாளரை மாற்றியுள்ளாராம்.
இதெல்லாம் எதற்கு செய்கிறார் என்று ஒன்றுமே புரியவில்லை.
அநேகமாக மூத்த தாத்தாவின் அதிரடி மாற்றங்களை பார்க்கும் பொழுது விரைவில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைத்து விடும் என்று தோணுகிறது.
கட்சியின் தலைமை
இதைவிட முக்கியமான ஒரு விடயம், கடந்த தேர்தலில் தமிழ் மக்களால் இனியும் வேண்டாமே என நிராகரிக்கப்பட்ட மற்றுமொரு தாத்தா தொடர்ந்தும் தமிழரசுக்கட்சியின் தலைமையில் நீடிக்கவுள்ளாராம்.
"மக்களால் நிராகரிக்கப்பட்டு நாடாளுமன்ற பதவி போனாலும், கட்சி பதவியை விடுகிறார் இல்லையே" இப்படி மக்கள் கேலி செய்கின்றனர்.
தமிழர்களின் உரிமைகளுக்காய் போராடி தம் இன்னுயிரை மாய்த்த தியாகிகளின் நினைவு தினங்கள் வரும்பொழுது மட்டும் இந்த தாத்தாவை காணக்கிடைக்கிறது.
அந்த நேரங்களில் மட்டும் தமிழ்த் தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதும், அஞ்சலி செலுத்தி, ஈகைச்சுடர் ஏற்றுவதும் என்று சொல்லி இவரது நாடகத்தை ஓட்டிக்கிட்டு இருக்காரு.
"அண்மையில் எதோ உலக அதிசயம் ஒன்று நடந்தது போல, தாத்தாவை தையிட்டியில் கண்டோம், நேற்றையதினம் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் கண்டோம். எல்லாம் அடுத்த தேர்தலுக்கான வாக்கு சேகரிப்புக்காகத்தான்." இப்படி சொல்லி விட்டு செல்கிறார் ஒரு நண்பர்.
பதவி வேண்டும்
அது ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழரசு கட்சியின் மற்றுமொரு தாத்தா அவசர அவசரமா ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார்.
நாங்கள் நினைத்தோம் தமிழ் மக்களை ஏமாற்றி ஏமாற்றி களைத்து விட்டார் போல, தனது போலி அரசியல் பயணத்தை முடித்து ஓய்வு பெறப்போகிறார் என.
ஆனால் அதில் அவர் சொன்ன விடயத்தை நினைத்தால் கோபப்படுவதா அல்லது சிரிப்பதா எனத்தெரியவில்லை.
"அனைவரும் ஏகமனதாக தன்னை ஏற்றுக்கொண்டால் தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைவராக வருவதற்கு தயாராம்.
அவர் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லையாம். முரண்பாடு இல்லாத நிலை ஏற்பட்டு அனைவரும் ஏக மனதாக தன்னை தெரிவு செய்வார்களாக இருந்தால், போட்டியில்லாது அனைவரினதும் ஒத்துழைப்போடும், இணக்கப்பாட்டோடும் தமிழரசுக்கட்சியின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளாராம்."
ஏன் தாத்தா இப்படி எல்லாம் நகைச்சுவை பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள் என சமூக வலைத்தளத்தில் இளைஞர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
பதவி சண்டை
இப்படியாக தமிழரசுக்கட்சியின் தலைப்பொறுப்பிற்கு தமிழ்த் தலைவர்கள் தள்ளாடும் வயதில் அடிபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சாப்பாட்டுக்காக சிறுவர்கள் சண்டைபிடிப்பது போல, தமிழ்த் தலைவர்கள் அடிபட்டுக்கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது.
இவர்களா தமிழர்களுக்கு தீர்வை பெற்றுத்தர போகிறார்கள், நிச்சயம் கிடையாது. கேட்டால் தமிழ் மக்கள் பிரதிநிதிகளாம், துடிப்போடு தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க போராடிக்கொண்டிருக்கிறார்களாம் என வெளியில் வாய் கூசாமல் அறிக்கை விடுகிறார்கள்.
முதலில் உங்கள் கட்சிக்குள் இருக்கும் பூசல்களுக்கு தீர்வு காணுங்கள், பின்னர் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சியுங்கள்.
இனப்படுகொலை தொடர்பில் அண்மையில் கனேடிய பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதனை சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி மறுத்து கருத்து வெளியிட்டிருந்தார்.
அலி சப்ரியின் குறித்த கருத்திற்கு ஓரிரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே எதிர்ப்பை காட்டியிருந்தனர்.
அப்போது இந்த தாத்தாக்கள் வாய் திறக்கவேயில்லை, மெளனிகளாகவே இருந்தனர், துளி அளவு கூட எதிர்ப்பை வெளியிடவில்லை.
இந்தநிலையில், நீங்கள் எல்லாம் இன்னும் அரசியல் செய்து எதை சாதிக்கத்துடிக்கின்றீர்கள்.
ஏமாற்றியது போதும்
"தாத்தாமார்களே நாங்கள் குழந்தைகளாக இருந்த போது நீங்கள் எங்களின் தாய், தந்தையரை போலி தமிழ்த்தேசியம் பேசி, ஏமாற்றி வாக்கு சேர்த்த காலம் முடிந்து விட்டது.
இனி வருவது தமிழ் இளைஞர் சமூகத்தின் காலம், இனி உங்களது வாய்களில் இருந்து வரும் மகத்துவமான வார்த்தைகள் எதுவும் செல்லுபடியாகாது.
அடுத்த தலைமுறையின் காலம் வந்து விட்டது, தமிழர்களின் மீதான அடக்குமுறைகள் வருங்காலங்களில் எப்படி இருக்கும் என எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
அதற்கு உங்களால் இனியும் தீர்வு பெற்றுத்தர முடியாது.
தயவு செய்து உங்கள் அரசியல் பயணங்களை முடித்துக்கொண்டு வருங்கால சந்ததியினருக்கு வழி விடுங்கள்.
நீங்கள் இதுவரைக்கும் தமிழ் மக்களுக்காக செய்தது போதும், சிறிலங்கா அரசாங்கம் செய்ததை விட அதிகமாக தமிழ் மக்களுக்கு செய்து விட்டீர்கள்.
அதற்கு எங்களது கோடி நன்றிகள்." இவ்வாறு இன்றைய தமிழ் இளைஞர் சமுதாயம் வேண்டுகோளை முன்வைக்கிறது.
