ஜனாதிபதி அநுரவின் சொத்து விபரங்களில் மாற்றம்: 1.5 கோடி ரூபாய் பெறுமதியான வாகனம் பட்டியலில் இல்லை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாரிய மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை.
எனினும், அவரது பெயரில் கடந்த ஆண்டு குறிப்பிடப்பட்டிருந்த டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் இம்முறை சொத்துப் பட்டியலில் இடம்பெறவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டதா அல்லது வேறு நபருக்கு மாற்றப்பட்டதா என்பது தொடர்பில் புதிய அறிக்கையில் தெளிவான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆண்டுக்கான சொத்து விபர அறிக்கை
அத்துடன், அந்த வாகனம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதற்கான தொகை ஜனாதிபதியின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டதாகவும் அவதானிக்கப்படவில்லை என சர்வதேச சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு 1.5 கோடி ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்த குறித்த டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம், கடந்த ஆண்டுக்கான சொத்து விபர அறிக்கையில் இடம்பெற்றிருந்த நிலையில், இம்முறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அறிக்கையின்படி ஜனாதிபதியின் ஒரேயொரு வருமான மூலம் அவரது ஜனாதிபதி சம்பளமாகும்.
அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய அவரது வருடாந்த வருமானம் 3,081,624 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதியின் மனைவியோ அல்லது மகனோ எவ்வித வருமானத்தையும் ஈட்டவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்து விபரங்கள்
ஜனாதிபதியின் மகனிடம் கையிருப்பாக 5,000 ரூபாவும், வங்கிக் கணக்கில் 2,500 ரூபாவும் மாத்திரமே இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதியின் மனைவியின் வங்கிக் கணக்கில் 321,888 ரூபா வைப்பிலிருந்ததுடன், அவரிடம் கையிருப்பாக 35,000 ரூபாவும் இருந்துள்ளது.
மேலும், ஜனாதிபதியின் மனைவிக்குச் சொந்தமான காணி மற்றும் வீட்டின் பெறுமதி கடந்த ஆண்டின் அறிக்கையில் 40 மில்லியன் ரூபாவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், இம்முறை அறிக்கையில் 2006ஆம் ஆண்டு உறுதியில் குறிப்பிடப்பட்ட பெறுமதியான 500,000 ரூபா பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதியின் பெயரில் எவ்விதக் கடன்களோ அல்லது ஏனைய நிதிசார் பொறுப்புகளோ இல்லை எனவும் குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி உள்ளிட்டோரின் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களைப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |