சரித் அபேசிங்கவின் சொகுசு வீடு முடக்கம்:இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவிப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் மனைவியிடமிருந்து ரூ.12 கோடி இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் சரித் அபேசிங்கவுக்குச் சொந்தமான ஒரு சொகுசு வீடு முடக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகமவிடம் தெரிவித்துள்ளது.
மனுவொன்றின் மூலம் நீதிமன்றத்துக்கு இந்த அறிவிப்பை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டாவது சந்தேக நபரான முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான பல சொகுசு வாகனங்களும் நான்கு வங்கிக் கணக்குகளும் மேல் நீதிமன்றத்தால் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மூன்றாவது சந்தேக நபர்
மூன்றாவது சந்தேக நபரான வருண ஹண்டிகே அருண சதுரங்கவின் மனைவி மற்றும் தந்தைக்குச் சொந்தமான இரண்டு வாகனங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான உதவிப் பணிப்பாளர் மற்றும் சட்ட அதிகாரி, 2025ஆம் ஆண்டின் குற்றச்செயல் வருமானச் சட்டம் எண் 5-இன் கீழ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், அடுத்த மாதம் 8ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
முதல் சந்தேக நபரான சரித் அபேசிங்க, இரண்டாம் சந்தேக நபரான ரகித ராஜபக்ச மற்றும் மூன்றாம் சந்தேக நபரான வருண ஹண்டிகே அருண சதுரங்க ஆகியோர் இவ்வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |