அடுத்த அரியணை இவர்களுக்கு தான்! முதல் உரையில் அறிவித்தார் மன்னர் சார்லஸ் (காணொளி)
இரண்டாம் இணைப்பு
பிரித்தானியாவின் புதிய மன்னராக செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் மூன்றாம் சார்லஸ் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மன்னராக சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சார்லஸ், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்த தனது வாழ்நாளில் எஞ்சிய காலம் முழுவதும் பாடுபடுவேன் என உறுதி அளித்துள்ளார்.
அரசியலமைப்பை நிலைநிறுத்தும் கடமைகளை மறைந்த மகாராணி மிகவும் உறுதியான பக்தியுடன் செய்தததை போன்று தாம் மேற்கொள்வேன் என அவர் கூறியுள்ளார்.
மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ததாக மன்னராக நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் மூன்றாம் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.
தனது அன்புக்குரிய தாய் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார் என பிரித்தானிய மன்னர் தெரிவித்துள்ளார்.
தனது தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தால் ஆழ்ந்த வருத்தத்தை உணர்வதாகவும், தேசத்திற்கு அவரது "வாழ்நாள் சேவையை" தொடர உறுதியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகாராணியான பின்னர் அன்பான மனைவி கமிலாவிடம் இருந்து நம்பகமான உதவியை பெற முடியும் எனவும் மன்னர் மூன்றாம் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த அரியணை
அடுத்த அரியணைக்கான வாரிசாக தனது புதல்வரான வில்லியம்சை வேல்ஸின் புதிய இளவரசராகவும் அவரது மனைவி கேட் மிடில்ரனை இளவரசியாகவும் நியமிப்பதாக சார்லஸ் அறிவித்தார்.
இதேவேளை மன்னர் மூன்றாம் சார்லஸ்சின் முதலாவது உரையானது தொலைக்காட்சியிலும் புனித சின்னப்பர் தேவாலயத்திலும் ஒளிபரப்பட்டது.
புனித சின்னப்பர் தேவாலயத்திலும் மகாராணியை நினைவுகூர்ந்து இடம்பெற்ற நினைவேந்தல் ஆராதனையில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் இந்த நினைவேந்தல் ஆராதனையில் பங்கேற்று, துக்கம் அனுஷ்டித்தனர்.
முதலாம் இணைப்பு
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசெபத்தின் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக சார்லஸ் சில மணிநேரத்தில் முறைப்படி அறிவிக்கப்படவுள்ளார்.
பிரித்தானிய மன்னராக சார்லஸை முறைப்படி அறிவிப்பதற்கான குழு, லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
இக்குழு சார்லஸை பிரித்தானியாவின் மன்னராக முறைப்படி அறிவிக்கவுள்ளது.
பிரித்தானிய மகா ராணியாக கடந்த 1952ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி முடிசூடிக்கொண்ட இரண்டாம் எலிசபெத், கடந்த 70 ஆண்டுகளாக ராணியாக இருந்தவர்.
உலகில் அதிக ஆண்டுகள் ராணியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற அவர், ஸ்கொட்லாந்தில் உள்ள அரண்மனையில் நேற்றுமுன்தினம் காலமானார்.
His Majesty The King will be proclaimed at the Accession Council at 10:00 today at St James's Palace.
— The Royal Family (@RoyalFamily) September 10, 2022
Watch live:
மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து, அவரது மகனான சார்லஸ், பிரித்தானியாவின் மன்னராகிறார்.
மன்னராவதற்கான இரண்டு நடைமுறை
இந்நிலையில், அவர் முறைப்படி மன்னராவதற்கான இரண்டு நடைமுறைகளில் முதல் நடைமுறை இன்று நடைபெற இருக்கிறது.
இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
இதையடுத்து, இரண்டாவது நடைமுறையாக சார்லஸ் மன்னராக உறுதிமொழி வாசித்து பதவியேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.