வைத்தியர் அர்ச்சுனாவின் புரட்சி: சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்தது என்ன..
கடந்த சில நாட்களாக சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த வைத்தியசாலையில் பொறுப்பேற்றுக் கொண்ட வைத்தியர் அர்ச்சுனா அங்கு இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படாத சேவைகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை அறிந்து கொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள்
வைத்தியசாலையில், உள்ள குறைபாடுகள் தொடர்பில் வெளிப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா , வைத்தியசாலையை மேம்படுத்த அயராது உழைக்கும் தன்னை வைத்தியசாலை பொறுப்பதிகாரி பதவியில் இருந்து அகற்ற சில வைத்தியர்கள் முயற்சிப்பதாகவும், அதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் துணை போவதாக வைத்தியர் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) தான் வரக் கூடாது என்பதற்காக பலதரப்பினர் ஊடாக வடமாகாண சுகாதார திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அவற்றினையும் மீறி நான் சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக கடமையேற்றுள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் என்னை இங்கே வர விடாது தடுத்தமை, நிர்வாக தகுதியற்ற வைத்தியர் ஒருவரை எனது பதவியில் இருத்தவே முயற்சித்தனர். ஆனால் அவர் நேர்முக தேர்வில் தெரிவாகவில்லை. நான் தெரிவாகி கடமையேற்றுள்ளேன். சாவகச்சேரி வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக இயங்காது இருந்த சிகிச்சை சில பிரிவுகளை மீள இயங்க வைத்துள்ளேன். ஏனைய சிகிச்சைகளையும் வைத்தியசாலையில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், என்னை பதவியில் இருந்து விலக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சில வைத்தியர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் வேலை செய்யும் சில வைத்தியர்கள் அதற்கு உடந்தையாக இருக்கின்றார்கள்.
ஏனெனில் , விபத்து , பிள்ளைப்பேறு உள்ளிட்ட சத்திர சிகிச்சைகளுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டு, அவர்கள் இதுவரை காலமும் இருந்துள்ளனர். தற்போது சிகிச்சை பிரிவுகள் மீள திறக்கப்பட்டு அவற்றை இயங்கு நிலைக்கு கொண்டு வரும் போது, அவர்களுக்கு வேலை அதிகமாகும் என்பதால் அவற்றை அவர்கள் விரும்பவில்லை.அத்தோடு அவர்கள் தனியார் வைத்தியசாலைக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படும் எனவும் அச்சப்படுகின்றனர்.
வைத்தியசாலையின் மருந்து களஞ்சியம் சீரான முறையில் இல்லை. பல மருந்துகள் நிலத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. ஒழுங்கான குளிரூட்டல் வசதிகள் இன்றி, குறைபாடுகளுடன் மருந்து களஞ்சிய சாலைகளில் மருந்துகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஜெனரேட்டர் வசதிகள்
இவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் வடமாகாண சுகாதார திணைக்களம் முன்னெடுக்கவில்லை. இவை எல்லாம் தெரிந்தும் அவர்கள் பல ஆண்டு காலமாக நடவடிக்கை எடுக்காது இருக்கின்றார்கள். அதுமட்டுமின்றி மின் தடை நேரங்களில் இயங்க கூடிய வகையில் ஜெனரேட்டர் வசதிகள் இதுவரையில் வைத்தியசாலையில் இல்லாத நிலைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஊழல்கள் நிறைந்து இருக்கலாம் என சந்தேகங்கள் உள்ளன.
வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடத்தினை மீள இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் முன்னெடுத்த வேளை மின் தடை ஏற்பட்டால், ஜெனரேட்டர் வசதிகள் இல்லை. அதனால் அவற்றை இயங்க வைக்க வேண்டாம் என எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். சத்திர சிகிச்சை கூடத்தினை நிர்மாணிக்கும் போது, அதற்கு ஜெனரேட்டர் வசதிகள் செய்யப்பட்ட வேண்டும் என தெரிந்திருக்க தானே வேண்டும்.
அவ்வாறு இல்லமல் ஒழுங்கான திட்டமிடல் வரைவுகள் இன்றி நிர்மாணித்த பின்னர், ஏதோ காரணங்களை கூறி அவற்றை இயங்க விடாது பல வருட காலமாக தடுத்து வைத்துள்ளார்கள். ஜெனரேட்டர் இல்லை என்றால், அவற்றை பெற்றுக்கொள்வதற்கு இதுவரையில் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாது, தொடர்ந்து சத்திர சிகிச்சை கூடத்தை மூடி வைத்துள்ளார்கள். பொறுப்பான நிர்வாகத்தில் உள்ளவர்கள் இங்குள்ள அரசியல்வாதிகளையும் பிழையாக வழிநடத்தி செல்கின்றனர்.
அதனாலேயே அபிவிருத்திகள் தடைபடுகின்றன. பின்னர், தெற்கில் உள்ள சிங்கள அரசாங்கம், தமிழ் மக்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கவில்லை என அரசியல் செய்கின்றனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனை செய்யாது, இதுவரையில் சடலங்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு உடற்கூற்று பரிசோதனைகளை முன்னெடுக்க காலதாமதமாகும்.அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி 50 ஆயிரம் ரூபாய் வரையில் உழைத்துக்கொள்கின்றனர்.
சத்திர சிகிச்சை கூடத்தினை இயங்கு நிலைக்கு கொண்டு வந்து, சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு (சிசேரியன்) வசதிகள் செய்து வரும் போது அவற்றினை குழப்புவதற்கு சில வைத்தியர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தால், அதனை வெளிப்படையாக கூறி என்னை பதவியை விட்டு விலக்கலாம்.
அதனை விடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக அயராது உழைக்கும் என்னை பதவியை விட்டு துரத்த முனைகிறார்கள் என கடுமையான குற்றச்சாட்டுக்களையும் வைத்தியசாலையில் நடக்கும் பல விடயங்களையும் வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தினார்.
ஊழல் மோசடிகள்
மேலும், வைத்தியசாலை நடவடிக்கையில் இருந்து இடை விலகிய வைத்தியர்கள் சிலர் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு பயந்து செயற்படுவதாகவும் வைத்தியர் அர்ச்சுனா கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அத்தியட்சகர் கடமைக்கு வந்த பின்னர் அங்கு பணிபுரிபவர்களால் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என குறிப்பிட்டார்.
நான் அங்கு இரண்டு தடவைகள் சென்றுள்ளேன். அங்குள்ள வைத்தியர்கள் தாதியர்கள் நன்றாக வேலை செய்கின்றனர். ஆனால் புதிதாக அத்தியட்சகர் கடமைக்கு வந்த பின்னர் அங்கு பணிபுரிபவர்களால் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அது தொடர்பில் அனைத்து உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளேன். குறித்த விடயம் தொடர்பான விசாரனைகள் இடம்பெற்று வருகின்றன. வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் தற்காலிகமாக மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவரின் பதவிக்கு வைத்தியர் ராஜீவ் அவர்களை நியமித்துள்ளோம்.
இருப்பினும் குறித்த நியமனத்தை வழங்கவிடாது வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ந்தும் தான் பதவியில் இருக்க வேண்டும் என இருந்து வருகிறார். தற்போது அங்கே சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மின்பிறப்பாக்கி ஊடாக வைத்தியசாலைக்கான அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பான விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவற்றை செய்ய விடாது குறித்த அத்தியட்சகர் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், சாவகச்சேரி வைத்தியசாலையில் அதற்கு முன்னரான நாட்களில் நடத்தப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் பகிரங்கமாவே வைத்தியர் அர்ச்சுனா வெளியிட ஆரம்பித்த காரணத்தினால் அவருக்கு எதிராக வைத்தியசாலைக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தன.
வைத்தியசாலை தொடர்பில் பல குற்றச்சாட்டு
வைத்தியர் அர்ச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பின்னர், அங்கு நடக்கும் குளறுபடிகள் தொடர்பில் தங்களது அனுபவங்களை பொதுமக்கள் பகிரங்கமாக அறிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
கடமை நேரத்தில் எப்போதும் தாதியர்கள் வெளியில் சுற்றுவது, வைத்தியசாலையில் பெற வேண்டிய மருந்துகளை வைத்தியசாலைக்கு வெளியில் இருக்கும் தனியார் மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவது என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை பொதுவெளியில், சமூக வலைத்தளங்களில் என மக்கள் பகிரங்கப்படுத்தி வருகின்றர்.
இந்த நிலையில், புதிதாக கடமையேற்றுள்ள வைத்தியர் அர்ச்சுனா , அத்தியேட்சகராக நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு தான்தோண்றித்தனமான முடிவுகளூடாகவும் வாய்மொழி துன்புறுத்தல்களாலும் வேலையை தொடர்வதற்கு பாதுகாப்பற்ற அகச்சூழலை ஏற்படுத்தியிருக்கின்றார் என்று குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
கடந்த கால காழ்ப்புணர்வுகளால் வைத்தியர் அர்ச்சுனா , அவரின் கீழ் பணியாற்றும் வைத்தியர்களின் நலனையும் கருத்திற் கொள்ளாமல் அவர்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை தீவிரப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் பாதுகாப்பாக அக் சூழுலை ஏற்படுத்தும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தனர்.
ஆனால், இதற்கு பிறகு காணொளிகள் மூலமாக தன்னிலை விளக்கம் வழங்கிய வைத்தியர் அர்ச்சுனா , நோயாளிகளின் உயிரை பணயம் வைத்து இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அத்தோடு, தன்னையும் அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னுடைய தொலைபேசிகள் உள்ளிட்ட உடமைகளை சேதப்படுத்தியதாகவும், இதனை செய்ததும் வைத்தியர்கள் தான் என்றும் வைத்தியர் அர்ச்சுனா வெளிப்படுத்தியிருந்தார்.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, தொடர்ந்து வந்த தினங்களில் பொதுமக்கள் வைத்தியசாலைக்கு வந்து திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் எதிர்ப்பினை வெளியிட்ட ஆரம்பித்தனர். இதன்படி, அடுத்து வந்த தினங்களில் வைத்தியசாலைக்கு முன்பாக குழுமிய மக்கள், தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் ஒன்றிணைந்து நிர்வாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னர் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வைத்தியசாலை வளாகத்தில் எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்தனர்.
தொழிற்சங்க நடவடிக்கை
எனினும், களத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதுடன், அங்கிருந்த முன்னார் நகர சபை உறுப்பினர் ஒருவரையும் கைது செய்திருந்தனர். வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்ததன் காரணமாக, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கி இருந்து சிச்சை பெற்றவர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு வீடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனையடுத்து ஊடகங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரது கவனமும் சாவகச்சேரி வைத்தியசாலை மீது திரும்பியது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலர் வைத்தியசாலையெ நோக்கி படையெடுத்தனர். அங்கிருக்கும் கள நிலவரங்களை வைத்தியர் அர்ச்சுனாவிடம் கேட்டறிந்து கொண்டனர்.
இந்தநிலையில், வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது வைத்தியசாலை இக்கட்டான நிலைமையில் உள்ளது என வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா அமைச்சர் டக்ளஸிடம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதன் காரணமாக வைத்தியர் அர்ச்சுனா மாத்திரம் தனி ஒருவராக இருந்து வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், வைத்தியசாலையில் கூடிய பொதுமக்கள், வைத்தியசாலை வழமை போன்று இயங்க வேண்டும் எனவும் இல்லையேல் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தும், வைத்தியசாலையை இயக்கக் கோரியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் எச்சரித்தனர்.
இவ்வாறான நிலையில், பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் இரண்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவகச்சேரி மருத்துவர் சங்கத்தினர் ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்து அறிய தந்தனர்.
விசாரணை செய்தல் மற்றும், நடவடிக்கை எடுத்தல் என்பன பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனினும், சேவை பெறுனர்களின் நலன் முக்கியமானது எனவும் மருத்துவர் சங்கம் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளின் அடிப்படையில், முதலாவதாக வைத்தியர் அர்சுனாவின் சேவையை நீடிக்க விட்டு ஒரு கால அவகாசம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக போராட்டம்
அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.ஆனால் தனிப்பகை தீர்ப்பதாக இருக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக அனைவரும் விரும்பாவிடில் வைத்தியர் அர்ச்சுனாவை மீள அனுப்புவது தொடர்பிலும், வேறு ஒருவரை நியமித்த பின்னும் அவரது குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பதிவுசெய்து நோயாளர்கள் பிரதேச மக்கள் ஆகியோர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இவை அனைத்துக்குமான சுயாதீன விசாரணை செய்து உண்மைகள் இருப்பின் உரியவர்கள் தண்டிக்கப்பட்டு மக்களுக்கு உண்மை தெரியப்படுத்தப்படவேண்டும் எனவும் மருத்துவர் சங்கத்தினால் கூறப்பட்டது. எனினும், சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெறும் குளறுபடிகளை பொதுவெளியில் அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பொதுமக்கள் தங்களது ஆதரவினை வெளியிட ஆரம்பித்தனர்.
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக போராட்டம், கடையடைப்பு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு தமது ஆதரவை பொதுமக்கள் முன்வைத்து வருகின்றனர். இந்தநிலையில், சாவகச்சேரி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண இரவு 7 மணியளவில் இடமாற்ற கடிதத்தை என்னிடம் கொடுக்க முற்பட்டார். அலுவலக நேரம் அல்ல என தெரிவித்து அதனை வைத்தியர் அர்ச்சுனா ஏற்கவில்லை. வைத்தியரின் மறுப்பை அடுத்து அவரை கைது செய்வதற்காக நேற்று இரவு காவல்துறையினர் அங்கு குழுமியிருந்தனர்.
இதேவேளை தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என காவல்துறையினரிடம் வைத்தியர் அர்ச்சுனா இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், தான் மாத்திரமே தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு பகல் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது உடல்நிலையும் பாதிப்படைந்துள்ளதாக வைத்தியர் அர்ச்சுனா குறிப்பிட்டார். விடயமறிந்த பிரதேச மக்கள் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக வைத்தியசாலை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆரம்பித்த நிலையில், மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை.
விசேட பேச்சுவார்த்தை
வைத்தியருக்கு ஆதரவாக போராட்டம் அத்தோடு, வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள விடுதியில் நேற்று இரவு முதல் தங்கியிருந்த வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பொதுமக்கள் தொடர்ந்தும் ஆதரவு வெளியிட ஆரம்பித்தனர்.
இதேவேளை, நேற்று இரவு முதல் வைத்தியசாலை வளாகத்தில் கூடிய மக்கள் இன்று மதியம் வரை வைத்தியருக்கு ஆதரவாக போராட்டத்தை மேற்கொண்டனர். அத்துடன் பல இடங்களில் கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக இன்று மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஏ 9வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டக்களத்திற்கு காவல்துறையினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். அதேவேளை, போராட்ட களத்திற்கு வருவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
மக்கள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பத்திரன மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் ஆகியோரை வெளியேற கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர், போராட்ட களத்திற்கு வருகை தந்தால் உயிருக்கு ஏதாவது நடந்துவிடும் என்று பயமாக இருப்பதாகவும், தம்முடன் பேசுவதற்கு, போராட்டத்தில் ஈடுபடுகின்ற ஐவரை அழைத்து வருமாறும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மக்களுக்காக சேவையில் ஈடுபடும் அதிகாரிகள் மக்களுக்கு பயந்து ஏன் பதவியில் இருக்க வேண்டும் எனக் கூறி, ஐவர் உள்ளே சென்று உரையாடுவதற்கு எதிர்ப்பு கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ள நிலையிலும், சுகவீன விடுமுறையின் காரணமாகவும் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |