புத்தர் சிலைக்கு அடியிலிருந்த குழந்தை – தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு
கண்டி - எல்கடுவ வத்தேகம பிரதேசத்தில் மே 4 ஆம் திகதி புத்தர் சிலையொன்றுக்கு அருகில், பிறந்து 5 நாட்களேயான சிசுவொன்றை கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு பெண்களால் குறித்த இடத்திலிருந்து சிசு கண்டெடுக்கப்பட்ட நிலையில், குழந்தை தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிசுவின் தாய் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிசுவின் தேவை கருதி அவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
பிறந்து 5 நாட்களேயான சிசுவை கைவிட்டு சென்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பெயரின் சிசுவின் தாய் வத்தேகம காவல்துறையினரால் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். குறித்த பெண், மாத்தளை - கரகஹஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் தனது வீட்டில் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டு, மாத்தளை பகுதிக்கு சென்ற பாரவூர்தியில் அவ்விடத்துக்கு வந்து குழந்தையை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
