மன்னாரில் மீண்டும் அகழ்ந்து எடுக்கப்பட்ட குழந்தையின் சடலம்
மன்னார் தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள துருக்கி சிற்றி பகுதியில் விபத்தின் போது உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயது ஏழு மாதம் ஆன குழந்தையின் சடலம் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) மன்னார் தாராபுரம் மையவாடியில் அகழ்ந்து எடுக்கப்பட்டது.
கடந்த 18ம் திகதி மாலை பாண் விற்பனை செய்வதற்காக சென்ற முச்சக்கர வண்டியில்,வீட்டு வளவில் இருந்து வெளியே வந்த குறித்த குழந்தை அடிபட்டதாக கூறப்பட்ட நிலையில் குழந்தையை உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
முறையான விசாரணைகளை முன்னெடுக்காத காவல்துறை
எனினும் குழந்தை இறந்து காணப்பட்ட நிலையில் மேலதிக நடவடிக்கையின் பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 19ஆம் திகதி தாராபுரம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

சடலம் தொடர்பில் மன்னார் காவல்துறை தரப்பினர் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நல்லடக்கம் நடந்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையிலான முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நீதவானின் உத்தரவு
இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்த நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (21) விசாரணைகளுக்காக குறித்த குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நீதவான் முன்னிலையில் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |