சீனாவின் தொடர் ஊடுருவல் இதற்காகத் தான் - வெளிவந்த அதிர்ச்சிகர அறிக்கை
இந்தியாவின் அருணாசல பிரதேசத்தில் உள்ள விலையுயர்ந்த அரிய வகை மூலிகைக்காகவே சீனா அடிக்கடி ஊடுருவுவதான தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இமயமலை பகுதிகளில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் அடி உயரத்தில் கார்டிசெப்ஸ் பங்கஸ் என்ற பெயரிலான அரிய வகை மூலிகைகள் வளர்ந்து காணப்படுகின்றன. தென்மேற்கு சீனாவிலும் இவை உள்ளன.
இமயமலையின் தங்கம்
இமயமலையின் தங்கம் என அழைக்கப்படும் இந்த அரிய மூலிகை விலைமதிப்பற்றது. தங்கத்தின் மதிப்பை விட விலை அதிகம் கொண்டது.
இந்த அரிய வகை மூலிகையானது இந்தியாவில் கிடா ஜதி என்றும் நேபாளம் மற்றும் சீனாவில் யார்சாகும்பா என்றும் திபெத்தில் யார்சாகன்பு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த மூலிகை பட்டாம்பூச்சியின் கூட்டுப்புழு போன்ற தோற்றம் கொண்ட நிலையில், ஆங்கிலத்தில் இதனை கேட்டர்பில்லர் பங்கஸ் என்றும் அழைக்கின்றனர்.
சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12 லட்சம் விலை மதிப்பு கொண்டது. சர்வதேச அளவில் 2022ஆம் ஆண்டில் ரூ.8,859.81 லட்சம் கோடி அளவுக்கு சந்தையில் இந்த மூலிகை விலை போயுள்ளது.
சீனாவில் இதற்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனை அதிகளவில் உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இதன் விளைச்சல் குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத ஊடுருவல்
இதனால், இந்த மூலிகையை தேடி, அருணாசல பிரதேசத்தில் சட்டவிரோத ஊடுருவலில் சீன வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை இந்தோ - பசிபிக் உயர்மட்ட தொலைத்தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மூலிகையானது, ஆண்மை குறைவு உள்ளிட்ட பல உடல் சார்ந்த நோய்களை தீர்க்கக் கூடியது என சீன நடுத்தர வர்க்கத்தினர் இதனை அதிக அளவில் வாங்கினாலும் அதற்கான அறிவியல்பூர்வ சான்றுகள் எதுவும் இல்லை.
இதற்காக சீன மூலிகை நிறுவனங்கள் சமீப ஆண்டுகளாக உள்ளூர்வாசிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து மொத்த மலை பகுதியையும் இந்த மூலிகையை அறுவடை செய்வதற்காக ஆக்கிரமித்துள்ளது.
இந்நிலையிலேயே, சீனாவை ஒட்டிய இமயமலை பகுதியில் விளையும் தங்கத்தின் மதிப்பை விட அதிக விலையுயர்ந்த இந்த மூலிகையை தேடி சீன வீரர்கள் பல்வேறு முறைகளில் ஊடுருவ முயன்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.