விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
இலங்கை தீவில் ஈழத்தமிழ் மக்கள் 70 வருடங்களாக அடக்கு முறையை பாரபட்சத்தை சந்தித்து போராடி வருகிறார்கள். முப்பதாண்டு காலம் எமது மக்கள் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
மிகப்பெரிய இனப்படுகொலைக்கு ஈழம் முகம் கொடுத்த நிலையில் இனப்படுகொலையின் காயங்களுடன் அது ஏற்படுத்திய பெரும் துயரங்களுடன் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான நல்லிணக்கத்தை கடந்த காலத்தில் இலங்கை அரசுகள் ராணுவ பாணியிலும் ஆயுத முனையிலும் ஏற்படுத்த முனைந்து தோற்றன.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அழிப்பதன் மூலம் வடக்கு கிழக்கு என்ற தமிழர் தேசத்தை சிங்கள தேசத்துடன் இணைத்து விட முடியும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நினைத்திருந்தார் ஆனால் அதுவே வடக்கு கிழக்கிற்கும் தென்னிலங்கைக்கும் இடையில் மேலும் பெரும் இடைவெளியை உருவாக்கி இருந்தது.
மாற்றத்தின் துவக்கமா ?
ஆனால் தமிழர்களின் உரிமையை ஏற்று இலங்கையில் ஒரு நிலையான தீர்வு ஏற்படுவதற்கு சிங்கள மக்களின் மனப்பாங்கு மாற்றமும் வட கிழக்கு குறித்த புரிதலும் அவசியமானது. அப்படியான ஒரு நிலை ஏற்படும் பொழுது இலங்கையில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கு தடையாக இருக்கும் பேரினவாத அரசியல் தலைவர்களின் ஒடுக்குமுறை அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற சூழலும் உருவாகும். அத்தகைய ஒரு மாற்றம் ஏற்படுவதற்கு ஏதுவான ஒரு நிகழ்வு அண்மையில் ஈழத்தில் நடந்தது.
அண்மையில் தென்னிலங்கையில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அணியொன்று வடக்குக்கு வருகை தந்திருந்தது. கிளிநொச்சியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் வடக்கு மக்களுக்கு இரத்த தானத்தை அளிக்கும் அந்த நிகழ்வை தொடக்கி வைத்து பேசுகின்ற வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கடந்த காலத்தில் நடைபெற்ற போரினால் ஈழத்தமிழர் இரத்தம் சிந்திய நிலையில் இத்தகைய இரத்த தானம் என்பது ஈழத்தமிழ் மக்களின் இழப்புகளின் நினைவுகளோடு தொடர்புடைய ஒரு விடயமாகும். ஈழத்தமிழ் மக்களை தென்னிலங்கை மக்கள் நெருங்கி வருகின்ற புரிந்து கொள்ளுகின்ற ஒரு நிகழ்ச்சியாகவும் இது அமைகிறது என்பதை வலியுறுத்திப் பேசியிருந்தேன்.
புலிகளை இதயத்தால் ஏற்கிறோம்
இந்த நிகழ்வில் நிறையப் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை முக்கியமான ஒரு அம்சமாகும். அதேவேளை புலிகள் இயக்கம் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை என்பதையும் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராகவே போராடியது என்பதையும் தென்னிலங்கை மக்கள் மாவீரர்களை நினைவு கூறுகின்ற சுதந்திரத்தை நிரந்தரமாக வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்க வேண்டும் வலியுறுத்தி இருந்தேன். இதற்கு பதில் அளித்து பேசிய பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவரும் தற்போதைய பாடசாலை ஆசிரியருமான ரங்கன செனிவிரத்தின சிங்கள மக்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை என்பதை நாம் இதயத்தால் ஏற்று கொள்ளுகிறோம் என்று கூறியிருந்தமை மிக நெகிழ்ச்சியாகவும் நிகழ்வில் முக்கியமானதாகவும் அமைந்தது.
வடக்கில் இரத்த தானத்தில் ஈடுபட்ட குறித்த குழுவின் ஒரு பகுதியினர் பின்னர் கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வருகை தந்திருந்தார்கள். இவர்கள் எனது நடுவில் நாவலின் வழியாக அறிமுகமாகிக் கொண்டவர்கள். இதில் றுகுணு பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் பேராசிரியர் ஷம்மிக்க லியனகே பேராசிரியர் டி..எம். எஸ் ஆரியரத்தின மற்றும் உளவளத் துணை ஆலோசகர் இந்திக்க குருகே உட்பட்ட சிங்கள புத்திஜீவிகள் ஆசிரியர்கள் மக்கள் என இத் தரப்பினர் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வருகை தந்தார்கள். 2020 ஆம் ஆண்டு மாவீரர் நாள் அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் அனுமதிக்கபடாத நிலையில் ரங்கன செனிவிரத்தின உள்ளிட்ட சிங்கள நண்பர்கள் நடுதல் நாவலை படித்துவிட்டு கிளிநொச்சி மாவீரர் துயரம் இல்லம் வந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். இந்த அரசு உங்களுக்கு விளக்குகளை ஏற்ற தாய்மார்களை வழிபட தடுத்தால் உங்களுக்கான தீபங்களை தெற்கில் இருந்து நாம் ஏற்றுவோம் என்று அவர் அப்போது கூறியிருந்தார்.
துயிலும் இல்லத்தில் சிங்கள சிறுவன்
இம்முறை ரங்கன எட்டு வயதான தன்னுடைய மகன் அகஸ்தீயையும் அழைத்து வந்திருந்தார். இங்கே உறங்குபவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் இவர்களை வழிநடத்தியவர் பெரியண்ணா பிரபாகரன் அவர்கள் என்றும் தன்னுடைய மகனுக்கு ரங்கன செனிவிரத்தின உருக்கமாக மாவீரர் துயிலும் இல்லத்தில் வைத்து எடுத்துரைத்தார். அங்கு வந்திருந்த அகஸ்தீ மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளின் போது கட்டப்பட்ட சிவப்பு மஞ்சள் கொடியில் எஞ்சிய ஒரு துண்டை கல்லறைகளுக்கு கட்டுவித்து அவற்றுக்கு மெழுகுதிரி தீபங்களை ஏற்றி மரங்களை நாட்டி அஞ்சலி செலுத்தினான். இன்றைய சிங்கள இளைஞர்களும் வரும் சிங்கள தலை முறைகளும் மாவீரர்களை அஞ்சலிக்கும் துவக்கம் ஈழத் தமிழரின் விடியலையும் சுதந்திரத்தையும் மெய்ப்பிக்கும் அடையாளங்களாக தென்பட்டன.
மாவீரர் துயிலும் இல்லம் விடுதலைப் புலிகள் காலத்தில் எப்படி இயங்கும்? ஒரு மாவீரரை விதைக்கும் பொழுது எப்படியான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதை உளவியல் ஆலோசகர் இந்திக்கா குருகே கேட்டு அறிந்து கொண்டார். மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பது என்பது தமிழர்களை உளவியல் ரீதியாக மிகப்பெரும் தாக்கத்திற்கு உள்ளாக்கி இருக்கும் என்பதை தாம் உணர்வதாக குறிப்பிட்டதோடு அழிக்கப்பட்ட கல்லறைத் துகள்களை பார்த்து தன்னுடைய வேதனையையும் பகிர்ந்து கொண்டார். மாவீரர் நாளை தமிழர்கள் கொண்டாடுவதை தடுப்பதற்காக 2015 ஆம் ஆண்டு வரையில் இந்த கல்லறைகளின் மேல் ராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர் என்பதை அவர்கள் கேட்டு அதிர்ந்து போனார்கள்.
கல்லறைகளை வணங்கிய சிங்களவர்கள்
பேராசிரியர் ஆரியரத்தின, மாவீரர் துயிலு இல்லத்தில் எஞ்சி இருந்த கல்லறைகளின் அருகில் சென்று அவற்றை வணங்கி அந்தக் கல்லறைகளில் பொறிக்கப்பட்ட மாவீரர்களின் இயக்க பெயர், வீரச்சாவடைந்த திகதி, வீரச் சாவடைந்த போர் நிகழ்வு, அவர்களின் முகவரி போன்றவற்றை தமிழில் வாசித்து அங்கு வந்த சிங்கள நண்பர்களுக்கு தெரியப்படுத்தி வணங்கினார். மாவீரர் நாளன்று ஏற்றப்பட்டு அணைந்து போயிரு சாம்பிராணிக் குச்சிகளையும் கற்பூரங்களையும் தேடி அந்தக் கல்லறை நிலைகளில் அருகிலேயே ரங்கன செனிவிரத்தின மற்றும் அவரது மகன் அகஸ்தீ மீண்டும் அவற்றை பற்றி மூட்டிக்கொண்டிருந்தனர். பிரசாத்துஷித வனசிங்க உள்ளிட்ட நண்பர்கள் துயிலும் இலலத்தில் மரங்களை நாடிக் கொண்டிருந்தார்கள்.
மாவீரர் துயரம் இல்லங்கள் எந்த காலகட்டத்தில் அழிக்கப்பட்டன என இந்திகா குருகே கேட்டார். போரின் இறுதித் தருணத்தில் மாவீரர் துயரம் இல்லங்கள் அழிக்கப்பட்டன என்று கூறினேன். அன்று அரசில் உயர் இடங்களில் இருந்தவர்களின் முடிவு தான் துயிலும் இல்லத்தை அழித்தது என்றும் இது சிங்கள மக்களின் நிலைப்பாடு அல்ல என்றும் ஒருபோதும் இதனை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் இந்திக்கா குருகே கூறினார். அத்துடன் எத்தனை ஆயிரம் மாவீரர்களின் கல்லறைகள் எங்கே விதைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்கள்.
நடுகல் நாவல்
மாவீரரைப் பற்றிய மாவீரர் துயிலும் இல்லத்தை பற்றிய என்னுடைய நடுகல் நாவலை தங்கள் பயண பையில் எடுத்து வந்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துணைப் பொறுப்பாளர் தமிழினி அவர்கள் எழுதிய சில நூல்களையும் கைகளில் எடுத்து வந்திருந்தார்கள். அவற்றை மாவீரர்களின் கல்லறைகளில் அருகே வைத்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். இப்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் அழிவுகளை ஏற்படுத்துவதை ஆக்கிரமிப்புகளை செய்வதை ஒருபோதும் புத்த மதம போதிக்கவில்லை என்று பேராசிரியர் ஷமிக்க லியனகே கூறினார்.
மாவீரர் துயிலுமில்லங்களை அழித்தமைக்காக தமிழ் மக்களின் மனங்களில் பாரிய வேதனையை ஏற்படுத்தியமைக்காக தாம் எல்லோரும் இந்த துயிலும் இல்லத்தில் வைத்து மன்னிப்பு கூறுவதாக பேராசிரியர் சம்மிக்க கூறினார். இந்த மன்னிப்பினை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுமாறு பேராசிரியர் ஆரியரத்தின கரங்களைப் பற்றினார். அத்துடன் போர் வீரர்களான மாவீரர்களை நினைவு கூற தமிழ் மக்களுக்கு இருக்கும் உரிமையை எவரும் தடுக்க முடியாது இது தமிழ் மக்களின் உரிமை இடம் என்பதை பேராசிரியர் சமிக்க வலியுறுத்தி பேசினார். அதேபோல மாவீரர்களை தமிழர்களோடு சிங்கள மக்களும் சேர்ந்து வந்து வழிபடுகின்ற ஒரு காலம் உருவாகும் அதுவே இலங்கை தீவுக்கு அவசியமானது என்பதையும் ஷம்மிக்க வலியுறுத்தினார்.
சிங்களவர் தேடி வர வேண்டும்
சிங்கள மக்கள் மீது நடந்த இனப்படுகொலையின் காரணமாக ஈழத்தமிழ் மக்களுக்கு வெறுப்பு விரக்தி அச்சம் என்பன இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனை நீங்கள் இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால் சிங்கள மக்கள் தான் தமிழ் மக்களை தேடி வர வேண்டும் இதனை சிங்கள நண்பர்களும் ஏற்றுக் கொண்டிருப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அத்துடன் நீங்கள் எல்லோரும் மாவீரர்களை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக அவர்களின் கனவுகளை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக தமிழ் மக்களோடு மீண்டும் உறவாட உறவினை பகிர்ந்து கொள்ள முடியும் அதுவே மிகச்சிறந்த வழி என்பதையும் அங்கிருந்த சிங்கள நண்பர்களிடத்தில் வலியுறுத்திப் பகிர்ந்து கொண்டேன்.
உண்மையில் அவர்களினுடைய இவ் வருகை மிக நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. எங்களுடைய மாவீரர்கள் கனவின் மீதான தாகத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துபவர்கள். கல்லறையில் இருந்தும் போராடும் தெய்வங்கள். அவர்கள் சிங்கள மக்களை தம்மை நோக்கி வரச் செய்வார்கள். தமிழர்களின் உடைய தாகத்தை போராட்டத்தினுடைய நியாயத்தை மிக அமைதியாக எமது கல்லறைகளில் உறங்கும் மாவீரர்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துரைப்பார்கள். உண்மையில் அத்தகைய ஒரு மாற்றம் அத்தகைய ஒரு வழி பிறப்பதன் வாயிலாக ஈழத்தமிழ் மக்களினுடைய கனவை தாகத்தை சிங்கள தேசம் அங்கீகரிக்கின்ற ஒரு காலம் நிச்சயம் ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 12 December, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.