இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுடன் வடக்கு - கிழக்கு சார்ந்த மதிப்பீடுகளும் கருத்தாடல்களும் பல வகையில் செல்கின்றன. இதில் சிலர் மக்களின் மனப்பாங்குகளுக்கு மாறான விதத்தில் பொருட்கோடல்களை செய்து தமது அரசியலையும் நோக்கங்களையும் விளைவிக்க முயல்கின்றனர்.
குறிப்பாக தேர்தலின் முடிவுடன் சில சிங்களப் பேரினவாதிகள் தமிழ் மக்களை நோக்கி சொன்ன சில வார்த்தைகள் தென்னிலங்கையில் பேரினவாதத் தீ இன்னமும் அழிந்துவிடாமல் உறங்கு நிலையில் இருக்கிறது என்பதையே காட்டியது.
கடந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த அரசில் முக்கிய பதவிகளில் இருந்தவர்களின் இத்தகைய மனப்பதிவுகள் ஈழத் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அடக்கவும் ஒடுக்கவும் முனைகின்றன.
தமிழ் பிரதிநிதிகள் பிரிந்து நின்றதால் ஏற்பட்ட விளைவு : தேர்தல் முடிவை எடுத்துக்காட்டும் முக்கியஸ்தர்
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் வடக்கு கிழக்கு மக்கள் சஜித்திற்கு ஆதரவு அளித்தது பிழை எனவும் முட்டாள்தனமான முடிவு என்றும் சிங்கள சமூக வலைத்தளங்களில் அதிகம் எள்ளி நகையாட்டப்படதாக சிங்கள நண்பர்கள் கூறினார்கள்.
அதேபோல சஜித் வடக்கு கிழக்கின் ஜனாதிபதி என்றும் வடக்கு கிழக்கில் வசிப்பது புலிகள் அல்ல கழுதைகள் என்றும் காண்பிக்கும் மீம்ஸ்சுகளும் சிங்கள சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தை பார்த்திருந்தேன்.
அதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் அநுர தரப்பு வெற்றியை பெற்றிருந்தது. அந்த வெற்றிக்குப் பின்னர் வடக்கு கிழக்கு மக்கள் குறித்து இத்தகைய பேரினவாதிகள் தமது கருத்தை மாற்றி வெளியிட்டு வருகிறார்கள்.
வடக்கு மக்கள் இனவாதத்தை கைவிட்டது நல்ல முடிவு என்று ஜேபிவியின் பொதுச்செயலாளர் ரிவின் சில்வா முதலில் வாயைத் திறந்தார்.
அநுர அரசு
இலங்கை பொதுத்தேர்தல் வரலாற்றில் தனித்த அரசியல் கட்சி ஒன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து வெற்றிப் பெற்றுள்ளமை இதுவே முதல் தடவை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவை முழுமையாக வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கூறியிருந்தார்.
அநுர அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த உதய கம்மன்பில இந்த விடயத்தில் மாத்திரம் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அத்துடன் வடக்கு கிழக்கு மக்களுக்கு எதிராக அரசியல் செய்வதையும் பேசுவதையுமே இவர் தன் வாழ்நாள் அரசியல் பணியாகச் செய்தும் வந்திருக்கிறார்.
வடக்கு மக்கள் வாக்களித்தது இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் மீதான வெறுப்பையே பிரதிபலிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கூறியிருந்தார்.
இவருடைய பார்வையில் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இனவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் தெரிவதில் ஆச்சரியமில்லை. ஆனால் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய அரசியல் செய்தியை தன்னுடைய பேரினவாத அரசியலுக்குப் பயன்படுத்துதான் அதிர்ச்சியும் ஆபத்தும் விளைவிக்கிறது.
தமிழ் மக்கள்
இதேவேளை இந்நாட்களில் இவர் மற்றொரு பேரினவாதக் கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்ற நினைப்பை தமிழ் மக்கள் மறக்க வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு உள்ளடங்கிய இந்த இலங்கை நாடு சிங்கள பௌத்த நாடு என்றும் இங்கு சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் தான் முதலிடம் வழங்க முடியும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச வேறு யாருமல்ல. தோழர் அநுர அவர்களின் முன்னாள் தோழர். ஜேவிபியின் பிரச்சாரப் பீரங்கி. அக் கட்சியின் முக்கிய உறுப்பினர். சந்திரிக்கா அரசின் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு எதிராக பேரினவாதக் கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புவதில் முன்னிலை வகித்தவர். இன்றும் மாறாமல் அதே பணியைத் தொடர்கின்றார்.
நாடு மெதுமெதுவாக பிரிவினைவாதத்திற்கு சென்று ஈழம் உருவாகுமா? என்ற சந்தேகம் எழுகின்றது என்று சொல்கிற புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார, இராணுவ முகாம்களை அகற்றுவதற்கும் மூடப்பட்ட வீதிகளை திறப்பதற்கும் அரசாங்கம் இவ்வளவு ஏன் அவசரப்படுகின்றது? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையெல்லாம் பார்த்தால் வடக்கு - கிழக்கில் ஒருபோதும் இனவாதம் நிலவவில்லை என்ற பேருண்மை மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.
பேரினவாத அரசினால் ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தமது தாயகம், உரிமை, நீதி வேண்டி விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
உலகில் விடுதலை வேண்டி போராடுபவர்கள் எல்லோரையும் ஒடுக்குகின்ற அரசுகளும் அதிகாரத் தரப்பினரும் இனவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் பிரச்சாரம் செய்வது மிக மிக எளிய வழிமுறையாக கையாளப்படுகின்றது.
வடக்கு - கிழக்கு மக்கள்
மனிதாபிமானத்திற்காக யுத்தம் செய்கிறோம் என்று மகிந்த ராஜபக்ச சொல்லியதைப் போலவே இது. இவர்கள் அவர் அவ்வாறு சொல்லும் போதும் உடன் இருந்தவர்களே.
எனவே வடக்கு கிழக்கு தமிழர் தேசமானது, சிங்கள மக்களுக்கு எந்த வகையிலும் எதிராக இருக்கவில்லை. அதனை விடுதலைப் புலிகளின் தலைவர் அழுத்தம் திருத்தமாக தனது மாவீரர் தின உரையில் பதிவு செய்ததும் வரலாறு.
அதனை சிங்கள மக்களும் உணரத் துவங்கி விட்டார்கள். ஆனால் இந்தப் பேரினவாதிகள்தான் இன்னமும் அடங்காமல் இந்தக் கோசத்தை வைத்தும் தமிழரை ஒடுக்க முனைகின்றனர்.
இனவாதம் உண்மையில் எங்கு இருக்கிறது? பேரினவாதிகள் எங்கு இருக்கின்றனர்? இன்று ஆளும் கட்சியாக இருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் உள்ள்ள ரிவின் சில்வா போன்றவர்களிடம்தான் இனவாதம் இருக்கிறது.
மக்களால் தோற்கடிக்கப்பட்ட பிறகும் இன்னமும் மாற மறுக்கும் விமல் வீரவன்சவிடமும் உதய கம்மன்பிலவிடமும்தான் பேரினவாதம் இருக்கிறது.
இப்போது புதிய மக்கள் முன்னணி என்று பேசத் துவங்கியள்ள சுகீஸ்வர பண்டார போன்றவர்களிடமும் தான் இனவாதம் வாழ்கின்றது. முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
வடக்கு கிழக்கில் நீங்கள் சொல்வது போல இனவாதம் இருந்திருந்தால், யார் என்றே தெரியாத, நாடாளுமன்றத்தில் எழுதிக்கொண்டு சென்றும் உரையாற்ற இயலாத, சரியாக உச்சரித்துப் பேச இயலாதவர்களுக்கு வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கமாட்டார்கள்.
அதேபோன்று தமிழ் தேசியக் கட்சிகள் மீதான கோவத்தில் விழுந்த வாக்குகளை வைத்து தமிழர்கள் தமது தேசக் கோரிக்கையை கைவிட்டுள்ளனர் என்றும் மகிழ்வுறவும் பிழையாகப் பொருட்கோடல் செய்யவும் தேவையில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 07 December, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.