தமிழ் பிரதிநிதிகள் பிரிந்து நின்றதால் ஏற்பட்ட விளைவு : தேர்தல் முடிவை எடுத்துக்காட்டும் முக்கியஸ்தர்
பிரிந்து நின்று பயணிப்பது தமிழ்த்தேசிய அரசியலுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தும். அதனை இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்(telo) சுரேன் குருசாமி தெரிவித்தார்.
தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு கூட்டம் வவுனியா (vavuniya)இரண்டாம்குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று(07) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அனைவரும் ஒருமித்து பயணிப்பது
கடந்ததேர்தலில் நாங்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் அதில் ஏற்ப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக பேசியிருக்கிறோம். குறிப்பாக எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியத்தை பாதுகாக்கும் முகமாக தமிழ்தரப்பில் இருக்கக்கூடிய அனைவரும் ஒருமித்து பயணிப்பது தொடர்பான விடயங்கள் இன்று கலந்தாலோசிக்கப்பட்டது.
கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தென்னிலங்கையின் அலை பெரிதாக வீசப்பட்டு எமது இளைஞர்கள் அள்ளுண்டு போனதை நாங்கள் அவதானித்திருக்கிறோம். தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துகின்ற வாக்குகள் கணிசமானஅளவு வழங்கப்பட்டிருந்தாலும் எங்களது கட்சிகளுக்கிடையில் இருந்த பிரிவினைகள் தென்னிலங்கை கட்சிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அது அந்தகட்சிக்கு அதிக ஆசனங்களை பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.
பிரிந்தால் தமிழ்தேசியத்திற்கு பேராபத்து
ஆகவே பிரிந்துநின்று பிரிவினையுடன் பயணிப்பது எமது இனத்தினுடைய இருப்பிற்கும் எதிர்கால தமிழ்த்தேசிய அரசியலுக்கும் பாதகமான சூழலை ஏற்ப்படுத்தும். அதனை இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம். இதனை சீர்செய்துகொண்டு தமிழ்த்தேசியப் பரப்பிலே பயணிக்கின்ற அனைவரையும் ஒருமித்துக்கொண்டு பயணிப்பது பற்றி கலந்துரையாடி இருக்கிறோம்.
இது தொடர்பாக மாவட்டரீதியாகவும் எமது கட்சி உறுப்பினர்களோடு பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். இன்னும் பலமான வகையில் மீள்கட்டுமானத்தினை செய்து எமது அரசியலை முன்னெடுக்க தயாராகஉள்ளோம். அத்துடன் கட்சிக்குள் நடந்த பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ரீதியகாவும் கூட்டங்களை நடாத்தி அவற்றை ஆராய்வதாக தீர்மானித்துள்ளோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |