தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி..!
தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈழ விடுதலை போராடடத்தின் ஆரம்ப கார்தாவான முத்துகுமார சுவாமி அமெரிக்காவில் மரணமடைத்துள்ள நிலையில் அவரது நினைவாக எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் போராட்டம்
மேலும் குறித்த கட்டுரையில், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவருமான சட்டத்தரணி தம்பித்துரை முத்துகுமாரசுவாமி கடந்த 20 ம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் காலமானார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி தம்பித்துரையின் மகனான இவர் பதின்ம வயதிலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். நீண்ட காலம் சிறை வாசமும் அனுபவித்தார்.
பதின்ம வயதில் விடுதலைப் போராட்ட செயற்பாட்டில் பங்கேற்று இறக்கும் வரை அதற்காக கடுமையாக உழைத்தார். அமெரிக்காவில் நாடு கடந்த தமிமீழ அரசின் ஆலோசகராகவும் கடமையாற்றிய இவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்தார்.
தமிழ்த் தேசிய அரசியலின் நியாயப்பாடுகளை, துயரங்களை வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கும் சொல்வதில் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்தது.
குமார் என பெரியவர்களினாலும் நண்பர்களினாலும் அழைக்கப்படுகின்ற முத்துக்குமாரசுவாமி தலைமைத்துவ ஆற்றலிலும் ஆங்கிலப் புலமையிலும் கைதேர்ந்தவராக இருந்தார்.
இறக்கும் வரை இக்கட்டுரையாளருடன் தொடர்பில் இருந்த குமாரின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை பேரிழப்பாகும்.
இலங்கையர்
தமிழ் அரசியல் இலங்கையர் என்ற அடையாளத்தை பேணிய காலகட்டம், தமிழ் இன அரசியலை ஆரம்பித்த காலகட்டம், தமிழின அரசியலை தமிழ்த் தேசிய அரசியலாக வளர்த்த காலகட்டம், விடுதலைப் போராட்டத்தை நடாத்திய காலகட்டம், என நான்கு காலகட்டங்களாக வளர்ந்து வந்திருக்கின்றது.
இதில் நான்காவது காலகட்டத்தில் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராக குமார் விளங்கினார். இக்காலகட்டம் 1968 ஆம் ஆண்டு ஆரம்பமான தமிழ் அரசியலை தலைமையேற்று நடாத்திய தமிழரசுக் கட்சி 1965 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து பங்காளியாக மாறியது.
கட்சியின் சார்பில் மு.திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகவும் பதவியேற்றார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனா யாழ்ப்பாணம் வந்தபோது அவரை சப்பரத்தில் அமர்த்தி யாழ் நகரிலிருந்து காங்கேசன்துறை வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் தமிழரசு கட்சியினர்.
இதனைப் பார்த்து சகித்துக் கொள்ளாத இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கட்சி சாராத வகையில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க முனைந்தனர்.
மூன்று தீர்மானங்களை அவர்கள் முக்கியமாக நிறைவேற்றினர். ஒன்று சமஸ்டிக் கோரிக்கையை கைவிட்டு விட்டு தனிநாட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தல், அகிம்சைப் போராட்டத்தை கைவிட்டு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தல், கட்சி சாராத வகையில் விடுதலை இயக்கமொன்றை கட்டியெழுப்புதல் என்பனவே இம் மூன்று தீர்மானங்களும் ஆகும்.
ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம்
இதற்காக 1968 ஆம் ஆண்டு “ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம்” என்ற அமைப்பை உருவாக்கினர். கட்சி அரசியலுக்கு அப்பால் விடுதலைப் போராட்டத்தை நடாத்துவதற்காக முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் இயக்கம் இதுவேயாகும்.
இதன் மத்திய குழுவில் முத்துக்குமாரசுவாமியும் ஒருவராக விளங்கினார் இவரை விட இலங்கை மன்னன் மகாஉத்தமன், சிவகுமாரன், மைக்கல் தம்பிநாயகம் ஆகியோரும் மத்திய குழுவில் அங்கம் வகித்தனர்.
இந்த அமைப்பு பிரதானமாக இரண்டு போராட்டங்களை நடாத்தியது. ஒன்று சியவச சுவீப்ரிக்கற் விற்பனைக்கு எதிரான போராட்டம், இரண்டாவது தமிழ்ப் பல்கலைக்கழகம் திருகோணமலையில் உருவாக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திய போராட்டம்.
அன்றைய காலத்தில் கல்வி அமைச்சினூடாக மாணவர்கள் மத்தியில் “சியவச” என்ற பெயரில் சுவீப்ரிக்கற் விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்த விற்பனையின் மூலம் கிடைக்கும் பணம் பின்தங்கிய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது.
ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் மாணவர்களின் பணத்தை சிங்களப் பகுதிகளில் செலவிட இருக்கின்றனர் எனக் கூறி இதனைக் கண்டித்து போராட்டத்தை நடாத்தினர்.
கொக்குவில் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் முற்றவெளி வரை ஊர்வலம் இடம்பெற்றது. ஊர்வலத்தின் முடிவில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. சியவச சுவீப்ரிக்கறறும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தும் போராட்டம் திருநெல்வேலி சந்தியிலிருந்து யாழ் முற்றவெளி வரை இடம்பெற்றது.
1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது. தேர்தல்கள் அமைப்புக்களை சிதறடிப்பது இங்கேயும் இடம் பெற்றது. ஈழத் தமிழர் இளைஞர் இயக்கத்தினர் மத்தியில் தமிழ் அரசியலை பாதுகாக்க வேண்டுமென்றால் தேர்தலில் பங்கு பற்ற வேண்டும் என்ற வாதத்தினை சிலர் முன்னெடுத்தனர்.
இதனால் இரண்டு வருடங்களிலேயே ஈழத் தமிழர் இளைஞர் இயக்கம் சிதைவடைந்தது. 1972 ஆம் ஆண்டு குடியரசு தினம் அனுஸ்டிக்கப்பட்ட போது தொடர்ந்து மூன்று நாட்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்திற்கு தமிழர் கூட்டணி அழைப்பு விடுத்தது.
பணிப்பகிஸ்பரிப்பு போராட்டத்தை வெற்றியாக்குவதில் தமிழ் மாணவர் பேரவையினர் முழு மூச்சாக உழைத்தனர். பணிப்பகிஸ்கரிப்பை மீறி செயற்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சேவை பேருந்துகளுக்கு பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டன.
இந்த வன்முறைகள் காரணமாக முத்துக்குமாரசுவாமி உட்பட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை
மாவை சேனாதிராஜாவும், முத்துக்குமாரசுவாமியும் ஒரே கைவிலங்கில் பிணைக்கப்பட்டு விமான மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர். நான்காம் மாடியில் விசாரிக்கப்பட்டு சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
முத்துக்குமாரசுவாமி விடுதலை செய்யப்பட்டவுடன் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் முத்துக்குமார சுவாமியை சந்தித்து தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரை தாங்கள் பயன்படுத்த அனுமதி தருமாறு வேண்டினர். அதற்கு இணங்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதன்பின்னர் தமிழீழ விடுதலை இயக்கத்துடனேயே அவர் பயணித்தார்.
1977 ஆம் ஆண்டு இனக் கலவரம் இடம் பெற்ற போது இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். கொழும்பு இந்துக்கல்லூரி அகதிகள் முகாமை பொறுப்பேற்று நடாத்தினார். அகதிகள் லங்காராணி கப்பலில் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்ட போது அவர்களை பொறுப்பேற்று யாழ்ப்பாணம் அழைத்து வந்தவரும் இவர் தான்.
அருளர் எழுதிய லங்காராணி நாவலில் குமார் என்ற பாத்திரம் இவர்தான். குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் மணல்காட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் முத்துக்குமாரசுவாமி அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். அங்கு சர்வதேசக் சட்டத்தில் முதுமானி பட்டத்தை பெற்றதோடு சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைமைச் செயலகத்திலும் சட்டவாளராகப் பணியாற்றினார்.
அந்தப் பணி காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் தேர்தல் கண்காணிப்பாளராகவும், போர் நிறுத்த கண்காணிப்பாளராகவும், சென்றிருக்கின்றார். அமெரிக்காவில் வசித்த போதே நாடு கடந்த தமிழீழ அரசின் ஆலோசகராகவும் செயற்பட்டார்.
இன அழிப்புக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஜெனிவாவிற்கும் பல தடவை சென்றிருந்தார். இந்தப் பணிகளை மேற்கொண்டிருந்த போதே கடந்த 20ஆம் திகதி மரணமானார்.
இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தேசிய விடுதலைக்காக செயற்பட்ட முத்துக்குமார சுவாமியின் நாமம் தமிழ்த் தேசிய அரசியல் இருக்கும் வரை நிலைத்திருக்கும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |