பிரித்தானிய - கனேடிய மக்களுக்கு விசா இல்லாத பயண அனுமதியை உறுதி செய்த சீனா
சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய மற்றும் கனடா நாட்டு குடிமக்களுக்கு விசா இல்லா பயணச் சலுகையை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றத்தின்படி, சாதாரண கடவுச்சீட்டு வைத்திருக்கும் இவ்விரு நாட்டு குடிமக்களும் நாளை (17.02.2026) முதல் சீனாவிற்குள் விசா இன்றி நுழையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா, வணிகம், உறவினர்களைச் சந்தித்தல் அல்லது போக்குவரத்து (Transit) போன்ற காரணங்களுக்காகச் செல்பவர்கள் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை சீனாவில் தங்குவதற்கு இந்தச் சலுகை அனுமதிக்கிறது.
விசா இல்லா கொள்கை
இந்த விசா இல்லா கொள்கை முதற்கட்டமாக 2026 டிசம்பர் 31 வரை நடைமறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணங்களின் தொடர்ச்சியாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட சுமார் 50 நாடுகளுக்கு சீனா ஏற்கனவே இச்சலுகையை வழங்கியிருந்தது.
இந்த புதிய விதிமுறை அமுலுக்கு வருவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் சீனாவிற்குப் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பிரித்தானிய மற்றும் கனேடிய பயணிகள் பயனடைவார்கள்.
விசா விண்ணப்பக் கட்டணம் மற்றும் கைரேகை பதிவு போன்ற நீண்டகால நடைமுறைகள் இனி இவர்களுக்குத் தேவைப்படாது என்பதால், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |