சிறிலங்கா அமைச்சர்களுக்கு சலுகைகளை வழங்கும் சீனா : பின்னணியிலுள்ள இராஜதந்திரம்
உலகில் வேறெந்த நாடுகளையும் விட சீனா இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகளவிலான பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கி வருகின்றது.
அவ்வகையில், முந்தைய நாடாளுமன்றத்தில், அனைத்து 225 உறுப்பினர்களும் சீனாவிற்கு சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதற்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPC) அதன் சர்வதேச ஈடுபாட்டின் ஒரு பகுதியாக ஈடுபடுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சீன பயணம்
தற்போதைய நாடாளுமன்றத்தில் இருந்து நியாயமான எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போதும், சீனாவிற்கு பயணம் செய்துள்ளனர்.
மேலும் எதிர்காலத்தில் மீதமுள்ளவர்களுக்கு இடமளிக்கும் வகையில் பல திட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
இந்த திட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத அரசியல்வாதிகளும் அடங்குவர்.
கொவிட் -19 தொற்றுநோய் இல்லையென்றால், பெரும்பாலானவர்கள் ஏற்கனவே சீனாவுக்குச் சென்றிருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மூலோபாய மையமாக இலங்கை
சீனா, அதன் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ரீதியாக வளர்ந்து வரும் சக்தியாக, அதன் சர்வதேச ஈடுபாடுகளை துரிதப்படுத்தியுள்ளது.
இலங்கை, இந்து சமுத்திரத்தில் சீனாவின் மூலோபாய மையமாக இருந்து, அதன் நலன்களுக்கு மையப்புள்ளியாக தொழிற்படுகிறது.
அமைச்சர்கள்தான், கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறையாக்கம் மற்றும் முடிவெடுப்பதில் மிகவும் முக்கியமானவர்கள்.
இதன் விளைவாக அவர்களுடனான ஈடுபாட்டினை அடிப்படையானதாக சீனா நோக்குகின்றமை அவதானிக்கத்தக்கது.
கட்சி சர் உறவு நிலைகள்
சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக 2015க்குப் பிறகு, இலங்கையின் அரசியலில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது எல்லையை விரிவுபடுத்தியது.
ஆட்சியில் இருக்கும் கட்சியை மட்டும் கையாளாமல், தற்போது எல்லாவிதமான தரப்புக்களிடமும் உறவுகளை வளர்க்கத் தொடங்கியுள்ளது.
சிறி லங்கா பொதுஜன பெரமுன (SLPP) சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒரு நல்ல பிணைப்பினை கொண்டுள்ளமை நாம் அனைவரும் அறிந்நததே ஆகும்.
உண்மையில், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச, இலங்கை - சீனா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக உள்ளார்.
அவர் சமீப காலங்களில் சீனாவிற்கு நாடாளுமன்ற பிரதிநிதிகளை வழிநடத்தியமை குறிப்பிடத்தக்காகும்.
சீனாவின் நிதியுதவி
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது, இலங்கையின் பிரதானமான உட்கட்மைப்பு வசதிகளுக்கு சீனா நிதியுதவிகளை வழங்கியது.
அத்துடன், சீனாவின் இலட்சியமான பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி (பிஆர்ஐ) திட்டத்தில் இலங்கை கையெழுத்திட்டது.
சீன அதிபர் ஷி ஜின் பிங் 2014 இல் இலங்கைக்கு விஜயம் செய்து கொழும்பு துறைமுக நகரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சஜித்தின் திட்டத்தில் சீனா
இப்போது, சீனா அனைத்து முக்கிய கட்சிகளுடனும் தொடர்புகளை வளர்த்துக் கொண்டுள்ளது.
அதேசமயம், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்படும் தொண்டு திட்டத்திற்கு சீன தூதரகம் பண நன்கொடையை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய அணுகுமுறை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வையில் இருந்து நாம் சிந்திக்க வேண்டும்.
இலங்கை போன்ற பல கட்சி ஜனநாயக நாட்டில் ஒரு கட்டத்தில் எதிர்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பது உண்மையே. யார் வேண்டுமானாலும் ஆட்சிப் பீடம் ஏறலாம்.
எனவே, இதனை கருத்திற்கொண்டு, சீனா தனது உறவை அதிகாரத்தில் உள்ள கட்சியுடன் மட்டும் கட்டுப்படுத்தாமல் நாடாளுமன்றத்தில் அனைவரையும் அணுகி வருகின்றமை கவனிக்கத்தக்கது.
